Saturday, December 14, 2013

அரசியல் கைதிகளுக்கிடையிலும் குற்றமிழைத்தவர்கள் உள்ளனர் கைதிகளை உடன் விடுவிப்பது சாத்தியமற்றது: வாசுதேவ நாணயக்கார!


14th of December 2013
அரசியல் கைதிகளுக்கிடையிலும்; குற்றமிழைத்தவர்கள் உள்ளனர். எனவே அவர்களை  உடனடியாக விடுதலை செய்வதென்பது முடியாதது. எனவே, இவர்கள் சரியாக இனங்காணப்பட்டதன் பின்னரே இது குறித்து தீர்மானங்களை எடுக்க முடியும் என  மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அரசு அமுல்படுத்த வேண்டும் என கடந்த  புதன்கிழமை   ஊடகவியலாளர் சந்திப்பின்போது வலியுறுத்தியிருந்தார்.  இதற்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் தொடர்பில் என்னால் எதுவும் கூறமுடியாது. ஆனால், ஆண்டகை கூறியிருப்பதை நாமும் அறிவோம். அவர் கூறியிருப்பதில் உள்ள ஒரு பிரச்சினை என்னவெனில் அரசியல் கைதிகள், சாதாரண கைதிகள் என யாரும் இதுவரையிலும் அரசினால் அடையாளம் காணப்படவில்லை.

தற்போது  புலிகளின் உறுப்பினர்களையே அரசியல் கைதிகளாகக் கூறப்படுகின்றது. ஆனால், அது இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. அவர்களுக்குள்ளும் குற்றமிழைத்தவர்கள் உள்ளனர். இந்த நிலையில் இவர்களைக் கைது செய்தமை அரசியல் பழிவாங்கல் என எவ்வாறு கூறுவது? இவர்கள் குறித்து ஆராயப்பட்ட பின்னரே எந்தத் தீர்மானத்தையும் எடுக்க முடியும்.

ஆனால், அதேவேளை குற்றங்கள் செய்தமைக்கு ஆதாரங்களின்றி சிறையில் கைதிகள் இருப்பார்களாயின் அவர்களை உடனே விடுதலை செய்ய முன்வர வேண்டும். அவ்வாறு அல்லாவிடின் அவர்கள் மீது வழக்காவது தொடர வேண்டும்.  இவ்வாறு ஒன்றுமில்லாது சிறையில் அவர்களை அடைத்து வைத்திருப்பது எம்மைப் பொறுத்தமட்டில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். ஆகவே இதுவிடயத்தில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என்றார்  வாசுதேவ நாணயக்கார.

No comments:

Post a Comment