20th of December 2013
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் எதிர்வரும் 24ஆம் திகதி வவுனியாவில் ஒன்று கூடவுள்ளனர் என, கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியின் தன்னிச்சையான செயற்பாடுகள், - மாகாணசபை சட்டங்களை மீறிய நடவடிக்கைகள், அவற்றால் அங்கு எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் அடுத்த கட்ட நகர்வைத் தீர்மானிப்பதற்கான கலந்துரையாடலாக இந்த ஒன்றுகூடல் அமையவுள்ளது.
இதன்போது, தமிழர் தாயகத்தில் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு, அரசியல் தீர்வு நடவடிக்கையில் அரசு காட்டும் அசமந்தப் போக்கு ஆகியவை உட்பட முக்கிய விடயங்கள் தொடர்பிலும் தீர்க்கமான முடிவு ஒன்று எடுக்கப்படும் என்றும் கூட்டமைப்பு தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை சர்ச்சைகளை தோற்றுவித்திருக்கும் இரணைமடு குடிநீர் விவகாரம் பற்றியும் பிரதானமாக இங்கு ஆராயப்படவுள்ளது. தற்போது பிரதேச வாதத்தினை தோற்றுவிக்கலாமென்ற அச்சம் ஒருபுறமும் மறுபுறம் இரணை மடுக் குளத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டு உள்ள ஒதுக்கப்பட்டுள்ள நிதி வடமாகாணசபையின் அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட நிதியினை விட அதிகமென்பதால் அந்த நிதியினை தவறவிடக்கூடாதென்ற கருத்துக்கள் பலம் பெற்றுள்ளதாலும் இந்த முக்கிய சந்த்திப்பில் இது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வவுனியா நகரசபை மண்டபத்தில் காலை 9 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த முக்கிய சந்திப்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர், வடக்கு மாகாண அமைச்சர்கள், கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் உட்பட கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் வடக்கு மாகாணசபை வந்த பின்னர் கட்சியின் வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் முதன்முதலாக ஒன்றுகூடி நடத்தும் முக்கிய சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்திலேயே இந்த முக்கிய சந்திப்பை வவுனியாவில் நடத்துவது தொடர்பில் முடிவெடுக்கப்பட்டது.
இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, பொன்.செல்வராஜா, ஈ.சரவணபவன், சுரேஷ் பிரேமச்சந்திரன், பா.அரியநேத்திரன், செல்வம் அடைக்கலநாதன், சி.சிறிதரன், சிவசக்தி ஆனந்தன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் இன்று நாடாளுமன்றில் நடைபெறவுள்ள 2014 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இறுதி வாசிப்புக்கான வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வாக்களிக்கும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
வரவு - செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அரசால் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு பாதுகாப்பு அமைச்சுக்கே இம்முறையும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமையால் மேற்படி முடிவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளது என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.