Sunday,5th of January 2014
யாழ். மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையங்களை விரைவில் மூடிவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன் தெரிவித்தார்.
யாழிற்கு வெள்ளிக்கிழமை வருகைதந்த அமைச்சர் குணரத்ன யாழ். மாவட்டத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்கள் மற்றும் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய பிரசேதங்களைச் சென்று பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில், யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ். மாவட்ட மீள்குடியேற்றத் தரவுகளை ஆராய்ந்தார்.
அதன்போது கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
புள்ளி விபரங்களை பார்க்கும் போது, யாழ். மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையங்களை விரைவில் மூடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேவேளை, பலாலி விமான நிலைய அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்றத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
சுனாமியின் பின்னர் குடும்பங்களின் தொகை இரட்டிப்பு அடைந்துள்ளது. அதாவது, இடம்பெயர்ந்த குடும்பங்களில் உப குடும்பங்களும் உருவாகியுள்ளன. அதனால், மீள்குடியேற்றத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் ஆகியோருடன் கலந்துரையாடிய பின்னர் எதிர்காலத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை, பலாலி விமானத்தளத்திற்கு அருகாமையிலுள்ள பொதுமக்களின் காணிகள் பற்றிய விபரங்களை சரியான முறையில் திரட்டித் தருமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் அவர் கோரிக்கை விடுத்தார்.
காணி விபரங்களை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால், திரட்டப்படும் விபரங்களை சரியான முறையில், சகல விடயங்களையும் உள்ளடக்கி திரட்டுமாறும் அரசாங்க அதிபரிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் 46 நலன்புரி நிலையங்கள் முன்னர் காணப்பட்டதுடன், இது வரைகாலமும் மேற்கொள்ளப்பட்ட மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் மூலம் அவற்றில் 12 நலன்புரி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
மிகுதி 34 நலன்புரி நிலையங்களிலும் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது