24th december 2013
சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிப் பயிலுநர்கள் இன்று (24) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அரசாங்கத்தால் 51 ஆயிரம் பட்டதாரிகள் கடந்த ஆண்டில் பிரதேச செயலகங்களுக்கு பயிலுநராக இணங்கப்பட்டிருந்தார்கள். இவர்களுள் வட மாகாணம் தவிர்ந்த ஏனைய பட்டதாரிகளுக்கு கடந்த மாதத்திற்கு முன்னர் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளுள் சாவகச்சேரி பிரதேச செயலகம் தவிர்ந்த 14 பிரிவுகளுக்கும் கடந்த 15ம் தேதி யாழ். மாவட்டச் செயலகத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர்களாலும், அரச அதிகாரிகளாலும் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன.
இந்த நியமனங்கள் தொடர்பாக சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் எதுவும் விடுக்கப்பட்டிருக்கவில்லை. இருந்தபோதிலும், கடந்த நாள்களில் தமக்கும் நியமனம் வழங்கப்படும் என அவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
நியமனம் வழங்கப்படாத நிலையில், பட்டதாரிகள், இன்றைய தினம் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணிவரை பிரதேச செயலக வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டபோது, பட்டதாரிகள் அனைவரும் கையொப்பமிட்டு மகஜர் ஒன்றையும் பிரதேச செயலரிடம் கையளித்தனர்.
தமது நியமனம் வழங்கப்படாமைக்கு அதிகாரிகளின் அசமந்தப் போக்கே காரணம் எனவும், எதிர்வரும் 26ம் தேதிக்குள் நியமனம் தொடர்பான உரிய பதில் கிடைக்காத பட்சத்தில் யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக பேராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
No comments:
Post a Comment