Thursday, December 19, 2013

இடம் பெயர்ந்தோர் குறித்து விநாயகமூர்த்தி முரளிதரனினால் (கருணா) வழங்கிய தகவல்கள் முற்றிலும் தவறானது!

19th of December 2013
யாழ் . மாவட்டத்தில் இடம் பெயர்ந்தவர்கள் மீளத்திரும்புதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில்
மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனினால் ( கருணா ) தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன .
 
வலி . வடக்கு பிரதேச செயலகத்தின் அறிக்கையில் மீளத்திரும்புபவர்கள் குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கைக்கும் , நாடாளு மன்றத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் இடையில் பெரிய வேறுபாடு இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .
 
தெல்லிப்பழைப் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் , 9 ஆயிரத்து 905 குடும்பங்கள் தமது சொந்த இடங்களுக்கு மீளத்திரும்ப வேண்டியிருப்பதாகச் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது .
 
இந்தக் கூட்டம் இடம்பெற்ற பின்னர் வலி . வடக்கில் எந்தவொரு மீளத்திரும்புதலுக்கும் மக்கள் அனுமதிக்கப்படவில்லை . இவ்வாறானதொரு நிலையில் நாடாளுமன்றத்தில் , நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2014 ஆம் ஆண் டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்த குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இடம் பெயர்ந்தவர்கள் மீளத்திரும்புதல் குறித்துத் தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது .
 
' வடக்கு மாகாணத்தில் , யாழ் . மாவட்டத்தில் 31 ஆயிரத்து 188 குடும்பங்களும் , மன்னார் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 22 குடும்பங்களும் , வவுனியா மாவட்டத்தில் 15 ஆயிரத்து 981 குடும்பங்களும் , முல்லைத்தீவு மாவட்டத்தில் 39 ஆயிரத்து 660 குடும்பங்களும் , கிளிநொச்சி மாவட்டத்தில் 40 ஆயிரத்து 594 குடும்பங்களும் மீளத் திரும்பியுள்ளன .
 
இதேவேளை , யாழ் . மாவட்டத்தில் ஆயிரத்து 228 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 410 பேர் முகாம்களிலும் 4 ஆயிரத்து 550 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 355 பேர் நண்பர்கள் அல்லது உறவினர் வீடுகளிலுமாக மொத்தம் 5 ஆயிரத்து 778 குடும்பங்களைச் சேர்ந்த 19 ஆயிரத்து 765 பேர் மீளத் திரும்ப வேண்டியவர்களாகவுள்ளனர் .
 
கிளிநொச்சி மாவட்டத்தில் முகாம்கள் இல்லை . எனினும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் 314 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 140 பேர் மீளத் திரும்ப வேண்டியவர்களாகவுள்ளனர் ' என்று அமைச்சர் என்று அமைச்சர் முரளிதரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் .
 
ஆனால் கடந்த 2012 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் இடம்பெற்ற வலி . வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் 9 ஆயிரத்து 905 குடும்பங்கள் மீளத்திரும்ப வேண்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது . இதன் மூலம் அமைச்சர் கூறிய தகவலுக்கும் வலி . வடக்கு பிரதேச செயலக அறிக்கைக்கும் வேறுபாடு உள்ளமை தெரியவந்துள்ளது .

No comments:

Post a Comment