24th December 2013
இலங்கைத் திருநாடு கடந்த காலங்களில் எதிர்நோக்கியிருந்த பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு துரித மற்றும் சமவிகித வளர்ச்சிக்கான பாதையில் நிதானத்து டன் பயணித்துவருவதனால், வெளிநாடுகளில் வாழ்ந்துவரும் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த இலங்கையர்களைத் தாய்நாட்டிற்கு திரும்பி வருமாறு அரசாங்கம் வலியுறுத்திக்கேட்டுள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற இலங்கையில் பணியாற்றுங்கள் எனும் தொனிப்பொருளில் அமைந்த மாநாட்டில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கலந்துகொண்டு உரையாற்றுகையில்,
இலங்கையில் வாழ்வதற்கும் பணியாற்றுவதற்குமென அறிவார்ந்த பணியாளர்கள் மற்றும் ஏனைய தொழில்சார் நிபுணர்களுக்கு உதவக்கூடிய சூழலொன்றை உருவாக்குவதில் அரசாங்கம் மிகவும் ஆர்வம் காட்டிவருவதாகத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில், கடந்த 1980 களில் தொடங்கி 2009 வரையிலான காலப்பகுதியில் நாட்டில் தோன்றியிருந்த நிச்சயமற்ற சூழ்நிலை காரணமாக எமது புத்திஜீவிகளில் பலர் நிம்மதியான வாழ்க்கை வசதிகளைத் தேடி ஏனைய நாடுகளுக்குச் சென்றிருந்தனர்.
இத்தகைய தனிநபர்கள் யுத்த சூழ்நிலையிலிருந்து தப்பித்துக்கொள்ளவோ, உயர்கல்வியைப் பெற்றுக்கொள்ளவோ, அதிக பணவருமானம் ஈட்டித்தரவல்ல வேலை வாய்ப்பு வசதியைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது சிறந்த வாழ்க்கைத் தரமொன்றை அனுபவிக்கவோ சென்றிருந்தாலும்,
அவர்களின் புறப்பாடு உண்மையிலேயே நாட்டிற்குப் பாரதூரமானதோர் இழப்பாகும்.
எமது நாடு கடந்த காலங்களில் முகம்
கொடுத்திருந்த பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு, தற்போது துரித சமவிகித வளர்ச்சிக்கான பாதையில் பயணித்துக்கொண்டிருப்பதனால், தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பிவருவதென வெளிநாடுகளில் வாழ்ந்துவரும் அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்த இலங்கையர்கள் கருத்திற்கொள்ள வேண்டிய காலம் தற்போது கனிந்துள்ளது.
கடந்த ஒரு சில தசாப்தங்களாக கொழும்பு மாநகரின் சேதன வளர்ச்சி காரணமாக அது எதிர்நோக்கி வந்துள்ள பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கென அண்மைக்காலமாக ஏராளமான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசாங்கம் தனது நிருவாக செயற்பாடுகளை ஸ்ரீ ஜெயவர்த்னபுர பிரதேசத்திற்கு மாற்றிவருவதால் உலகத்தரம்வாய்ந்த பொருளாதார மையமொன்றாக வளர்ச்சியடையத் தக்க வகையில் கொழும்பு அதிகளவிலான இடவசதியைக் கொண்டதாக விளங்கவுள்ளது.
கால்வாய் வலையமைப்பு, வடிகாலமைப்பு மற்றும் சாக்கடை அகற்றல் முறைமைகள் போன்ற பாரியளவில் உதாசீனம் செய்யப்பட்டிருந்த பழைய உட்கட்டமைப்பு வசதிகள் தற்போது வளர்ச்சி கண்டுவருகின்றன. நீர் வழங்கல் மற்றும் மின்சார விநியோகம் ஆகியவற்றிலான வினைத்திறனை அதிகரிக்கவும் முன்னேற்றவுமென திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அண்மைக்காலமாக கணிசமான அளவிலான கவனத்தை ஈர்த்துள்ள இன்னுமொரு முன்னேற்றத்துறையாக மாநகர திண்மக் கழிவுப்பொருள் முகாமைத்துவம் அமைந்துள்ளது. நீண்டகால தவணைமுறையில் இந்தப் பிரச்சினையை எவ்வாறு வெற்றிகரமாகக் கையாள்வதென்பது குறித்து தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment