20th of December 2013
சர்வதேச சமூகத்திடம், தனக்கு சார்பாக இந்த அரசு இன்று எடுத்து காட்டிவரும் ஒரே சாதகம், வடமாகாணசபை தேர்தலை நடத்தி, வடக்கில் வட மாகாணசபையை நிறுவியது ஆகும். இன்று இந்த சாதகமும், பாதகமாகும் நிலைமை வடக்கில் தோன்றி வருகிறது. வடக்கில் தேர்தலை நடத்தி, மாகாணசபை அமைக்கப்பட்டாலும், தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட முதல்வரின் நிர்வாகத்துக்கு எந்த வித அதிகாரங்களும் 13ம் திருத்தத்தின்படி வழங்கப்படாமல், தொடர்ந்தும் ஆளுநர் ஆட்சியே நடக்கின்றது என்ற கருத்து இன்று மேலெழுந்து வருகிறது. அடுத்த மார்ச் மாதம் வரப்போகும் மனித உரிமை பேரவை கூட்டத்திற்கு முன்னர் இதுபற்றி திட்டவட்டமாக தெரிந்து கொள்ளும் தேவை உலகத்துக்கு இருக்கிறது. இது உண்மையா என்பதை பற்றி உலகம் வட மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனிடம்தான் உலகம் கேட்டு தெரிந்து கொள்ளுமே தவிர வடக்கு ஆளுநர் சந்திரசிறியிடம் கேட்காது என்பதை உங்கள் அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
வீ -எப்எம் பண்பலை வானொலியில் “சித்தாமுள்ள" என்ற சிங்கள மொழியிலான பிரபல நேரடி அரசியல் விவாத நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் எச். ஆர். மித்ரபாலவிடம் மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் மேலும் உரையாடிய மனோ கணேசன் கூறியதாவது,
நீங்கள் பட்ஜெட்டில் மாகாணசபைகளுக்கு 148 பில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளீர்கள். இதில் ஊழியர் சம்பளம் மற்றும் நிர்வாக செலவுகளுக்கு 111 பில்லியன் போக மிகுதி 37 பில்லியன்தான் மாகாணங்களின் அபிவிருத்தி நிதி. இதுவும் வட மாகாணசபை உட்பட ஒன்பது மாகாணசபைக்குமான தொகை என்பதை மறக்க வேண்டாம். ஆனால், பாதுகாப்பு, நகர அபிவிருத்தி என்ற ஒரே ஒரு அமைச்சுக்கு மட்டும் 270 பில்லியன் ஒதுக்கியுள்ளீர்கள்.
போலிஸ், காணி விடயங்களை தவிர்த்து பார்த்தாலும் கூட 35 விடயங்கள் மாகாணசபைகளுக்கு பரவலாக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த விடயங்களையும் இன்று மத்திய அரசாங்கமே கையில் எடுத்து கொண்டுள்ளது. ஆகவே மாகாணங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை. ஆனால், இந்த அரசியலமைப்பை மீறும் செயல் பற்றி ஏனைய மாகாணசபைகள் மூச்சு விடுவது இல்லை. வடமாகாணசபையும் இப்படியே சொல்வதை கேட்டுக்கொண்டு, தருவதை வாங்கி சாப்பிட்டுக்கொண்டு இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்.
இந்த பம்மாத்தை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். வடக்கில் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகத்தை வைத்துக்கொண்டே, அதிகாரங்களை ஆளுநர் மூலம் நடைமுறைபடுத்தும் உங்கள் போக்கு விரைவில் முடிவுக்கு வரும். ஒன்றில் மாகாணசபை முறைமையை ஒழியுங்கள். அல்லது தெரிவு செய்யப்பட்ட நிர்வாகத்துக்கு சட்டப்படி உள்ள அதிகாரங்களை வழங்குங்கள். உலகத்துக்கு வட மாகாணசபை தேர்தலை நடத்திவிட்டோம், வட மாகாணசபையை அமைத்துவிட்டோம் என அறிவித்தல் கொடுத்துவிட்டு மறுபுறம் அதை ஒரு புஸ்வாண வெற்று சபையாக வைத்திருக்க பார்க்கிறீர்கள். நாடு முழுக்க மாகாணசபைகளுக்கு உரிய அதிகாரம் இல்லையென்றால் எதற்காக 111 பில்லியன் ரூபா செலவில் ஊழியர்களும், கட்டிடங்களும், நிர்வாக செலவுகளும் என கேட்கிறேன்.
அடுத்த வருடம் மார்ச் மாதம் வருகிறது. அதற்கு முன்னர் உலகம் வடக்கில் மாகாணசபை நிர்வாகம் எப்படி நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறது. அதுபற்றி இப்போதே தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. ஆளுனர் சந்திரசிறி ஒரு தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதி அல்ல. எனவே வடக்கு மாகாணசபை நிர்வாகம் பற்றி வடக்கு முதல்வர் கூறும் கருத்துக்கு மிகவும் முக்கியத்துவம் காத்திருக்கின்றது. முதல்வர் என்ற பெயரில் வடமாகாணசபையை தொடர்ந்து வெற்று புஸ்வான சபையாக வைத்துக்கொண்டு இருக்க விக்கினேஸ்வரானால் முடியாது. மறுபுறம் இந்த சபையை சுட்டிக்காட்டி உலகத்துக்கு பொய்மை தோற்றம் காட்டும் அரசின் முயற்சிக்கு துணை போகவும் அவரால் முடியாது. ஆகவே அவர் உரிய நேரத்தில் உண்மையைதான் கூறுவார். அதைதான் நாங்களும் எதிர்பார்க்கிறோம்.
அதற்கு முன்னர் வடமாகாணசபைக்கு, 13ம் திருத்தத்தின்படி உரிய அதிகாரங்களை வழங்கி நிலைமை பாரதூரமடையமுன் அதை சீர் செய்யும் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது. இதைத்தான் உங்கள் அரசு தலைவர் ஜானதிபதிக்கு சில தினங்களுக்கு முன்னர் நான் சொன்னேன். இப்போது அமைச்சர் பசில் ராஜபக்ச, வடக்கு வசந்தம் திட்ட பொறுப்பில் இல்லையென தெரிகிறது. அதில் இப்போது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பொறுப்பு வகிப்பதாக, ஜனாதிபதியின் பேச்சில் தெரிகிறது. எனவே நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை ஒரு நிகழ்வில் சந்தித்த போது இதையே அவருக்கு நான் சொன்னேன். வடக்கில் சுமூகமான நிலைமை நிலவுமானால் அது தெற்கில் எங்களுக்கும் நல்லது என்பதாலும் இதை நான் சொன்னேன். இதை கேட்டு தவறை திருத்தி கொள்வது உங்கள் பொறுப்பு. நிலைமை கைமீறி போனபின் விக்கினேஸ்வனையோ, எங்களையோ குறை சொல்வதில் பிரயோஜனம் இல்லை.
No comments:
Post a Comment