Friday, January 10, 2014

போருக்குப் பின்னர் தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை- வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன்!

Saturday,11th of January 2014
இராணுவ ஆட்சி முறைமை தமிழர்களுக்கு தேவையில்லை என்றும், போருக்குப் பின்னரான காலத்தில் தமிழர்களுக்கான பாதுகாப்பு இல்லாத நிலையே இருப்பதாகவும் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
வடக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்தல்” என்னும் தொனிப்பொருளில் யாழிலுள்ள விடுதியொன்றில் இன்று நடைபெற்ற மாகாண சபை உறுப்பினர்கள், சிவில் சமுகப் பிரதிநிதிகளுக்கிடையிலான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
வடக்கில் வாழ்கின்ற மக்கள் பாதுகாப்பையும், சுதந்திரத்தையுமே எதிர்பார்க்கின்றார்களே தவிர, பெருந்தெருக்கள் அமைப்பதையோ, விடுதிகள் அமைப்பதையோ விரும்பவில்லை. போருக்குப் பிந்திய காலத்தில் மக்களின் பாதுகாப்பும், சுதந்திரமும் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
 
வட மாகாணசபை உருவாக்கப்பட்டு 3 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்கிறார்கள் என மக்கள் மத்தியில் கேள்விகள் பல எழுந்துள்ளது. முதற்கட்டமாக கிராம மட்டத்தில் தொழில்சார் முன்னேற்றத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.
 
வடக்கிலிருந்து பல கல்விமான்கள், புத்திஜீவிகள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். மீளவும் அவர்கள் இங்கே வருவதற்கு பாதுகாப்பு இல்லை என்ற ஒரு காரணத்தினாலேயே அவர்கள் இங்கே வருவதை தவிர்க்கின்றார்கள். அவர்கள் இங்கு மீளவும் வந்து பிரதேசத்தை அபிவிருத்தியடையச் செய்வதற்கு அவர்களது பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துவதற்கு, அரசாங்கத்துடன், பேசவுள்ளோம் என்றார்.
 
எங்கள் மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் போரின் பின்னரும் மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமலும், தமது விவசாய நிலங்களில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை இன்றும் காணப்பட்டு வருகின்றது. அகதி முகாம்களில் வாழ்வாதார நெருக்கு வாரங்களுக்கு மத்தியில் எமது மக்கள் வாழந்து கொண்டிருக்கின்றார்கள்.
 
இந்நிலையில், எமது மக்களின் காணிகளை இராணுவம் ஆக்கிரமித்துள்ளதோடு, எமது நிலங்களில் இராணுவம் விவசாய நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். எல்லா சமூகங்களும் இணைந்து ஒற்றுமையினை நாங்கள் விரும்புகின்றோம்.
 
தமிழ் மக்களின் மொழி, கலை, கலாச்சாரம் தெரியாத இராணுவ ஆட்சி முறைமை வடக்கு தமிழர்களுக்கு தேவையில்லை. இதனால் தான் இராணுவப் பின்னணி கொண்ட ஒருவர் ஆளுனராக இருப்பதை நாங்கள் எதிர்ப்பதோடு, சிவில் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளுனராக வரவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
 
நேற்று காலை நடைபெற்ற இந்த செயலமர்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment