Sunday, January 5, 2014

வடக்கு ஆளுநருக்கு பதவி நீடிப்பு இல்லை: ஆறு மாதத்தில் புதிய ஆளுநர் நியமனம்!.

Sunday,5th of January 2014
வட மாகாண ஆளுனருக்கு இனிமேல் பதவி நீடிப்பு வழங்கப்படாது என்றும், அவரது பதவிக்காலம் முடிந்த பின்னர் புதிதாக சிவில் ஆளுனரை நியமிப்பதாகவும், வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வாக்குறுதி அளித்துள்ளார்.
 
வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடன், கடந்த வியாழக்கிழமை அலரி மாளிகைக்குச் சென்று மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசியிருந்தார். வடக்கு மாகாண சபையின் சுமுகமான செயற்பாட்டுக்கு காணப்படும் முட்டுக்கட்டைகள் குறித்து ஜனாதிபதியிடம் வடக்கு மாகாண முதல்வர் சுட்டிக்காட்டியிருந்தார்.
 
முக்கியமாக, இராணுவப் பின்னணியைக் கொண்ட ஆளுனரை நீக்கி விட்டு, சிவில் ஆளுனரை நியமிக்க வேண்டும் என்று முதல்வர் விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு, தற்போதைய ஆளுனரை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுத்தால், பல பிரச்சினைகள் உருவாகலாம் என்றும், அதனால் அவரது பதவிக்காலம் முடியும் வரை பொறுத்திருக்கும்படியும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
 
மேஜர் ஜெனரல் சந்திரசிறியின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், அவரது பதவிக்காலம் முடிந்த பின்னர், புதிய சிவில் ஆளுனரை நியமிப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
 
அதேவேளை, வடக்கு மாகாண சபையின் தலைமைச் செயலராக உள்ள விஜயலட்சுமி ரமேசுக்குப் பதிலாக, திருவாகரனை நியமிக்க வேண்டும் என்றும் வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார். மேலும், மாகாண சபைக்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment