Sunday,5th of January 2014
பெரும்பான்மை சமூகத்திடம் இருந்து அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டும். சுயாட்சி கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் சமூகத்தினை அடக்கி ஆள நினைக்கக்கூடாது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதை கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கை முஸ்லிம் சமூகத்தை வேதனைப்பட வைத்துள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 11 பேர் கையொப்பமிட்டு கிழக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக ஊடகங்களில் பார்த்து வேதனையும் அடைகின்றேன். முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த ஒருவர் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 11 பேர் கையொப்பமிட்டு தங்களது எதிர்ப்பினை ஆளுநருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர்.
இதனை நோக்குகின்றபோது இந்நாட்டின் சிறுபான்மையினராகவும் கிழக்கு மாகாணத்தில் இரண்டாவது சிறுபான்மையினராகவும் மொத்த சனத்தொகையில் 35 வீதத்திற்கு மேல் வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தின் மீது நாட்டின் இன்னுமோர் சிறுபான்மை இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருக்கின்ற இனத்துவேசத்தையும் முஸ்லிம்கள் தமிழர்களால் அடக்கி ஆளப்பட வேண்டும் என்கின்ற கருத்துக்கு தூபமிடுவதைப் போன்ற ஓர் செயலாகவே இதனைப்பார்க்க முடிகின்றது.
சமூகங்களை பிரித்தாளுவதன் மூலம் அரசியல் இலாபம் தேடுகின்ற ஈனச் செயலாகவே இதனைப் பார்க்க முடிகின்றது. முஸ்லிம்கள் இதை திரும்பிப் பார்க்கின்ற போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உதவி அரசாங்க அதிபர் என்பது முஸ்லிம்களுக்குரிய ஓர் ஆசனமாக இருக்கையில் 21 வருடங்களுக்கு முன்பு புலிப்பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட முன்னாள் உதவி அரசாங்க அதிபர் வை.அஹமட்டுக்கு பின்பு இதுவரை முஸ்லிம்களுக்குரிய அந்த ஆசனம் தமிழர்களால் தான் நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
ஆனால் மேலதிக அரசாங்க அதிபர் ஒருவரை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நியமியுங்கள் என எந்த ஒரு முஸ்லிம் அரசியல் வாதியும் கோரவில்லை.
சமத்துவம், விட்டுக்கொடுப்பு, இன ஒற்றுமை பற்றி பேசுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனுடைய சுயரூபத்தை வெளிக்காட்டுகின்ற இந்த ஈனச்செயலை கிழக்கு வாழ் முஸ்லிம்கள் வன்மையாகக் கண்டிக்கின்றனர்.
No comments:
Post a Comment