Monday, August 10, 2015

மஹிந்தவின் பாதுகாப்பு குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மஹிந்தவின் பாதுகாப்பு குறித்து அரச புலனாய்வுப் பிரிவு தயாரித்த மதிப்பீட்டு அறிக்;கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு, சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு இன்றைய தினம் உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட வேண்டுமெனக் கோரி புதிய இடதுசாரி கட்சியின் தேசியப் பட்டியல் வேட்பாளர் சட்டத்தரணி சேனக பெரேராவினால் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குருணாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஸவிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனால் ஏனைய வேட்பாளர்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனவே பாதுகாப்பு குறைக்கப்பட வேண்டும் அல்லது ஏனைய வேட்பாளர்களுக்கும் அந்தளவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென கோரப்பட்டிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, தேர்தல்  ஆணையாளா மஹிந்த தேசப்பிரிய, பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான அமைச்சர் ஜோன் அமரதுங்க, பாதுகாப்புச் செயலாளர், காவல்துறை மா அதிபர் உள்ளிட்டவர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

பாதுகாப்பு தேவை என்றால் அது குறித்து தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மனுதாரர் பாதுகாப்பு கோரினால் பாதுகாப்பு வழங்கத் தயார் என சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த மனு எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீளவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், நிதியரசர்களான அனில் குணரட்ன, பிரயசாத் டெப் ஆகியோர் இந்த மனுவை விசாரணை செய்துள்ளனர்.

No comments:

Post a Comment