Friday, December 13, 2013

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்துமாறு கோரி ஐரோப்பிய பாராளுமன்றில் தீர்மானம்!

14th of December 2013
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு கோரி ஐரோப்பிய பாராளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முழு அளவில் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய பாராளுமன்றம் அறிவித்துள்ளது. வடக்கில் மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட்டமை மற்றும் சமாதானத்தை நிலைநாட்டியமை வரவேற்கப்பட வேண்டியது என ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் யுத்தம் இடம்பெற்ற வலயங்களில் தற்போதைய நிலைமைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடக்குமுறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

யுத்த வலயத்தில் இராணுவத்தினரின் பிரசன்னம் கவனிக்கப்பட வேண்டியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தங்களது சொந்தங்களுக்கு என்னவாயிற்று என்பதனை அறிந்து கொள்ள இலங்கை மக்களுக்கு உரிமை இருப்பதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் பில் பென்னியன் தெரிவித்துள்ளார். இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

நம்பகமான விசாரணைகள், இராணுவத்தினரை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பரிந்துரைகள் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவற்றை முழுமையாக அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஐரோப்பிய பாராளுமன்றம் தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment