15th of December 2013
ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ தலைமையில் நாளை காலை 7 மணியளவில் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்னாபிரிக்கா மற்றும் கென்யாவுக்கான அதிகாரபூர்வ பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய பின்னர் ஜனாதிபதி பங்கேற்கும் முதலாவது அதிகாரபூர்வ கடமை இந்த அமைச்சரவைக் கூட்டமாகும்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் வரவு - செலவுத்திட்டங்கள் தொடர்ச்சியாக தோற்கடிக்கப்பட்டு வருவது அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த இந்தக் கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளது.
அத்துடன், போதைப்பொருள் கொள்கலனுக்கு அனுமதிக் கடிதம் கொடுத்தமை தொடர்பில் பிரதமருக்கு எதிராக கிளம்பியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் இதில் ஆராயப்படவுள்ளது.
இதேவேளை, வரும் 18ஆம் திகதி நாள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய சம்மேளனக் கூட்டமும் நடைபெறவுள்ளது. இந்த நெருக்கடிகளின் காரணமாகவே போயா தினம் என்றும் பாராமல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரியவருகிறது.
அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் போயா நாளன்று அமைச்சரவை கூடவுள்ளது இதுவே முதல்முறையாகும்.
No comments:
Post a Comment