22nd of December 2013
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் தற்பொழுது வடக்கில் பகல் கனவு காணும் ஒரே நபர் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் என திவயின தெரிவித்துள்ளது.
திவயின வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
முதலமைச்சராக பதவியேற்கும் முன் விக்னேஸ்வரன் பல கனவுகளை கண்டாலும் முதலமைச்சரான பின் அவர் காணும் கனவுகள் அலங்காரமானவை. விக்னேஸ்வரனின் புதிய கனவு வடக்கு மாகாணத்தில் இருந்து தேசியக் கொடியை நீக்குவது. வடக்கில் நடைபெறும் எந்த அரச நிகழ்வுகளிலும் தேசியக் கொடியை ஏற்றுவதை தடை செய்ய விக்னேஸ்வரன் தீர்மானித்துள்ளார்.
இந்த தீர்மானம் தொடர்பில் அவரது தனது சகாக்களும் ஏற்கனவே அறிவித்து விட்டார். இலங்கையின் தேசியக் கொடியில் இருக்கும் வாள் ஏந்திய சிங்கம் விக்னேஸ்வரனுக்கு பிரச்சினையாக உள்ளது.
இலங்கையின் தேசியக் கொடிக்கு பதிலாக வடக்கு கிழக்கில் ஈழக் கொடியேற்றபட்ட சந்தர்ப்பங்கள் அன்று இருந்தன. ஈழக் கொடியை ஏற்றும் போது அதற்கான தேசிய கீதம் இருந்தது.
2002 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட சமாதான உடன்படிக்கையின் பின்னர் ஈழக் கொடிக்கும் அதன் தேசிய கீதத்திற்கும் முக்கிய இடம் கிடைத்தது. வடக்கு கிழக்கில் உள்ள அரச பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் பொழுது ஈழக் கொடியே பறக்கவிடப்பட்டது. ஈழ தேசிய கீதமே பாடப்பட்டது.
இலங்கையில் அன்று இரண்டு சக்திகள் இருந்தன. இன்று அரசாங்கத்தை தவிர வேறு சக்திகள் கிடையாது. எனினும் வடக்கு மாகாண முதலமைச்சர் தற்பொழுது அப்படியான சக்தியை கட்டியெழுப்பி வருகிறார்.
வடக்கு மாகாணத்தில் இலங்கை தேசியக் கொடியை தடை செய்யும் அதிகாரத்தை விக்னேஸ்வரனுக்கு யார் கொடுத்தார் என்பது கேள்வியாகும்.
இலங்கையின் தேசியக் கொடியை அவமதிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இலங்கையின் தேசியக் கொடிக்கு அவமதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்று நாட்டின் அரசியல் சட்டத்தில் 11 இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் இலங்கையின் தேசியக் கொடியை நீக்க நடவடிக்கை எடுத்திருக்கும் முதலமைச்சருக்கு தண்டனை வழங்க நாட்டின் அரசியல் சட்டத்திலும் இலங்கை குற்றவியல் சட்டத்திலும் இடம் இருக்கின்றது என்பது சந்தேகமில்லை.
கோயில் ஒன்றின் பூசகர் கோயிலுக்குள் எந்த நாடகத்தை ஆடவும் இடமிருந்தாலும் இலங்கையின் ஒரு மாகாண சபையின் முதலமைச்சர் ஒருவருக்கு நாட்டின் சட்டத் திட்டங்களையும் சம்பிரதாயங்களை மாற்றும் வல்லமை இருக்கின்றது என்பது கேலிக்குரியது.
இலங்கையின் தேசியக் கொடிக்கு அவமதிப்பை ஏற்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என்றால், வடக்கு மாகாணத்தில் தேசியக் கொடியை நீக்க வேண்டும் என கூறும் விக்னேஸ்வரனுக்கு தண்டனை வழங்கப்படாதது கேள்விக்குரியது.
சிங்கம் இருப்பதன் காரணமாகவே விக்னேஸ்வரன் தேசியக் கொடியை எதிர்க்கின்றார். சிங்கம் என்பது சிங்கள மக்களை மட்டும் பிரதிநிதித்துவம் செய்கிறது என விக்னேஸ்வரன் காண்கின்றார்.
சிங்கக் கொடியின் முன்னால் அதன் நிழலில் சத்தியப் பிரமாணம் செய்த விக்னேஸ்வரனுக்கு இன்று சிங்கக் கொடி அருவருப்பாக மாறியுள்ளது. சிங்கக் கொடிக்கு பதிலாக புலி அடங்கிய தேசியக் கொடியை அவர் எதிர்பார்க்கின்றார்.
எனினும் விக்னேஸ்வரனின் நோக்கங்களில் மாற்றம் உள்ளது. வடக்கு மாகாணத்தின் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்தில் இருந்து சிங்கள பொலிஸாரையும் இராணுவத்தினரையும் அப்புறப்படுத்த வேண்டும் எனக் கூறும் விக்னேஸ்வரன், இராணுவ அதிகாரியான ஆளுநரை நீக்குவதற்கான பின்னணியை உருவாக்கியுள்ளார்.
வடக்கு மாகாணத்தை முழுமையான தமிழ் மாகாணமாக மாற்ற முயற்சிக்கும் விக்னேஸ்வரன், நிறைவேற்ற துடிப்பது யாருடைய நோக்கத்தை என்பது தெளிவாகியுள்ளது.
புலி காட்டை மாற்றிக் கொண்டாலும் அதன் உடலில் இருக்கும் வரி மாறாது. இந்த கதை விக்னேஸ்வரனுக்கு பொதுவாகியுள்ளது என திவயின குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment