Monday, December 30, 2013

தமிழ்-முஸ்லிம் மக்களிடையில் இன முரண்பாட்டை ஏற்படுத்த மறைமுக சதி - ரவூப் ஹக்கீம்!

31st of December 2013
கல்முனை மாநகர சபை வரவு செலவு திட்டத்தை இன்று (31) செவ்வாய்க்கிழமை நிறைவேற்றுவதற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதாக கல்முனை மாநகர சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் உறுதி அளித்துள்ளனர்.
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில் அவர்கள் உறுதியளித்தனர்.
 
30-12-2013  திங்கட்கிழமை மாலை 5 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை நிந்தவூரிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.எம்.ஹசனலியின் இல்லத்தில் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
 
கட்சி தலைவரின் வேண்டுகோளின்படி தங்களுக்கான முரண்பாடுகளை கலைவதற்கும் ஒற்றுமையாக செயற்படுவதற்கும் கல்முனை மாநகர சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் இணக்கம் தெரிவித்தனர்.
 
இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உரையாற்றுகையில்,
 
அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தளம் கல்முனை
என கூறிவிட்டதோடு அதனை உடைக்க பல சக்திகள் மறைமுகமாக செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றன. இந்த சதித் திட்டத்திற்கு ஆளாகாமல் நாங்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டி இருக்கிறது. தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இன முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கான முயற்ச்சிகளும் தற்போது கட்டவிழ்த்தப்பட்டிருக்கின்றன.
 
அவற்றில் இருந்து இரண்டு சமூகங்களும் தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டி இருக்கிறது. இவ்வாறான மறைமுக சக்திகளின் ஊடுருவல்களிலிருந்து தம்மை விடுவித்து கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும். எனவே மிகவும் அவதானத்துடனும் புரிந்துணர்வுடனும் நாம் செயற்பட வேண்டும்´ என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment