தற்பொழுது ஊடகவியலாளராக இருக்கின்ற தயா மாஸ்டர் போன்ற புலிகளின் முன்னாள் போராளிகள் பலர், அரசாங்கத்தின் சூழ்நிலைக் கைதிகளாக இருக்கின்றனர் எனவும், அவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது எனவும் வட மாகாண சபை உறுப்பினர் திருமதி. அனந்தி சசிதரன் இன்று தெரிவித்தார்.
சுனாமி கடல்கோள் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் 9ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு, வடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமிச் சதுக்கத்தில் இடம்பெற்ற பொழுது அங்கு தயா மாஸ்டருடன் நீண்டநேரமாக உரையாடிய பின்னர் ஊடகவியலாளருக்கு தமது சந்திப்பு தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இருவரும் நீண்ட நேரம் உரையாடியமை தொடர்பாக ஊடவியலாளர்கள் திருமதி அனந்தியிடம் வினாவிய பொழுது அவர் கருத்துத் தெரிவிக்கையில், நாங்கள் என்னுடைய கணவனான எழிலன் இயக்கத்தில் இருந்த காலத்திலிருந்து மிகவும் நெருங்கமான நண்பர்கள். நாம் திருகோணமலையில் இருந்த பொழுது தமிழீழ விடுதலைப் புலிகள் எமக்கு தொலைத் தொடர்பு கருவிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துதரவில்லை.
அக்காலப்பகுதியில் நான் தாயாமாஸ்டரிடம் கேட்டுக்கொண்டதற்கமைய அவர் எமக்கு டெலிபோன் வசதிகளைச் செய்து தந்திருந்தார். அந்த அளவிற்கு தயாமாஸ்டர் மிகவும் நல்ல மனிதர். ஆனால், அவர் தற்பொழுது அரசாங்கத்தின் சூழ்நிலைக் கைதியாகவுள்ளார். இவரைப் போன்ற பலர் இன்னமும் சூழ்நிலைக் கைதிகளாகவே வாழுகின்றனர். முன்னாள் போராளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment