27th of December 2013
யாழ்ப்பாணத்திலுள்ள பல இந்து ஆலயங்களில் தோன்றியுள்ள நிர்வாக முரண்பாடுகள் கவலையளிப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் சு.அருமைநாயகம் தெரிவித்தார். இத்தகைய முரண்பாடுகள் குறித்து மாவட்டச் செயலகத்துக்கு அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட இந்து ஆலயங்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு, மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் அரச அதிபர் தலைமையில் நேற்றுக் காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்த அரச அதிபர் மேலும் கூறுகையில், ஆலய நிர்வாக முரண்பாடுகள் குறித்து அதிகளவான முறைப்பாடுகள் நீதிமன்றத்திற்குச் சென்றிருக்கின்றன.
எந்தவொரு நிர்வாகங்களுக்கிடையிலும் முரண்பாடுகள் ஏற்படுவது நியதியே. அதுகுறித்து நிர்வாகங்களுக்கிடையிலேயே பேசித் தீர்க்கப்பட வேண்டும். ஆலயத்துக்கு வெளியே முரண்பாடுகள் வரக்கூடாது. ஆலயங்களுக்கென தனித்துவமான சிறப்புக்களும் புனிதமும் இருக்கின்றது. அவற்றை பாதுகாத்து பேணுகின்ற வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டிய தார்மீகப் பொறுப்பு எம்மிடத்தே உள்ளது.
மேலும், கலாசார பண்புடைய சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பிலுள்ள ஆலய நிர்வாகங்கள் தமக்குள் மோதிக்கொள்ளாது சமூகத்தைக் கட்டியெழுப்பவேண்டும். ஆலயங்களின் நிர்வாகங்கள் மக்களுடைய கருத்துக்களையும் உள்வாங்கி நீதி, நியாயத்துடன் செயற்பட்டால் எந்தப் பிரச்சினைகளும் ஏற்படாது. ஆலயங்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையும் பாதுகாக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment