28th of December 2013
இன்றைய இளைய சமுதாயம் எமது தமிழர்களின் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என யாழ். மாவட்டத்தில் கலைத்துறையில் இரண்டாம் இடத்தை பெற்ற வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மாணவி தாட்சாயிணி மனோகரன் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் சட்டத்துறை விரிவுரையாளராக பணியாற்றி சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டுமென்பதே என் பூரண இலக்கு. நான் தரம் ஒன்றை அராலி சரஸ்வதி மகாவித்தியாலயத்திலும் பின்னர், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்றேன். புலமைப் பரிசில் பரீட்சையில் 102 புள்ளிகளையே பெற்றேன்.
சாதாரண தரத்தில் 6ஏ, 3சி களை பெற்றபோதும் கலைப் பிரிவையே தேர்ந்தெடுத்தேன். ஒவ்வொருவரும் தமக்கு பொருத்தமான துறைகளை தேர்ந்தெடுக்கும்போதே வாழ்வில் சோபிக்க முடியும் என்பதே என் சொந்த அபிப்பிராயம்.
நான் பாடங்களை கஷ்டப்பட்டு படித்ததை விட இஷ்டப்பட்டே படித்தேன். அதன் விளைவே இந்த மகத்தான வெற்றி. வெறுமனே கல்வியில் மட்டுமே அக்கறை செலுத்தாது பேச்சு, விளையாட்டு என சகல துறைகளிலும் ஈடுபட்டேன்.
அன்றாடக் கல்வியும், மேலதிக வாசிப்பும் என் வெற்றிக்கு மேலும் ஒரு வெற்றி. வறுமை என்பது கல்விக்கு தடை என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. நானும் பல பொருளாதார இடர்களின் மத்தியிலேயே எனது கல்வியை தொடர்ந்தேன்.
ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்பவன் கூட நாளை தேக்கு விற்பான்’ என்பார்கள். என்னை ஊக்குவித்த அனைவருக்கும் என் நன்றிகள் பல கோடி.
நான் என் ஆசிரியர் சிவஞானபோதம், அம்மா சிவகுமாரி ஆகியோரை என் இரு கண்களாக கருதுகிறேன். என் வாழ்வில் திருப்பு முனையும் அவர்களே. அவர்களுடன் எனது பாடசாலை அதிபர் நோயல் விமலேந்திரன், ஆசிரியர்கள், மற்றும் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். எத்தனை இடர்வரினும் அதனையும் தாண்டி எமது சமூகத்திற்கு பணியாற்றுவேன் என்றார்.
No comments:
Post a Comment