Wednesday, December 18, 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐங்கரநேசன் தேசியக் கொடி அரியநேத்திரன் தேசிய கீதம், சர்ச்சைக்கு மேல் சர்ச்சை!

19th of December 2013
இலங்கையின் வட கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்கள் சிங்கள மொழியிலுள்ள தேசிய கீதத்தை பாடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
 
அவரது கருத்துக்கு பல்தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன.
வட கிழக்குப் பகுதிகளில் உள்ள தமிழ் பாடசாலைகள், கலாச்சார நிகழ்வுகள் அல்லது இலங்கையின் அமைச்சர்கள் வரும்போது தேசிய கீதத்தை சிங்களத்தில் பாடும்படி பணிக்கப்படுகிறார்கள் என்று அரியநேத்திரன் கூறுகிறார்.
 
எனவே வட கிழக்கிலுள்ள தமிழ் பிரதேசங்களில் சிங்களத்தில் தேசிய கீதம் பாட வேண்டிய அவசியம் இல்லை என்று தான் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது கூறியதாக அவர் தெரிவித்தார்.
 
சிங்கள மொழியில்தான் தேசிய கீதம் பாடவேண்டுமாக இருந்தால், தேசிய கீதமே பாடவேண்டிய அவசியம் இல்லை என்றும் பாராளுமன்றத்தில் தான் வலியுறுத்தியதாகவும் அவர் கூறுகிறார்.
 
வடக்கு கிழக்குப் பகுதிகளில் ஒரு நிர்வாக மொழியாக தமிழ் இருக்கும்போது, ஏன் சிங்கள மொழியில் தேசிய கீதத்தை பாடவேண்டும் என்பதே தனது நிலைப்பாடு எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
 
எனினும் பாராளுமன்றத்தில் தான் தெரிவித்தக் கருத்துக்கள் தனது சொந்தக் கருத்துக்ளே எனவும், அவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்கள் அல்லவென்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடமாகாண சபையின் அமைச்சர் ஐங்கரநேசன் மன்னாரில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் தேசியக் கொடியை ஏற்ற மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
 

No comments:

Post a Comment