
யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்களை முழுமையாக குடியோற்றுவதற்கு கால அவகாசம் தேவை என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியேற்றம் செய்வது சிறிய பிரச்சினை. அடுத்த வருட இறுதிக்குள் முழுமையாக மீள் குடியேற்றம் செய்ய முடியும்.
30 வருடகால போர் முடிவுக்கு வந்த பின்னர், நான்கு ஆண்டுகளுக்குள் முழுமையாக மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டுமென எதிர்பார்ப்பது சாத்தியமற்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐ.நாவின் விசேட பிரதிநிதி சலேகா பெயானி இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் அவர், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த மக்கள் அடிப்படை வசதிகளின்றி வாழ்கின்றனர் எனவும், மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் வாழ்வதாகவும் அவர்களுக்கு வீடுகள், சமூக சேவைகளை, மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment