Sunday, December 15, 2013

இலங்கை அரசுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் பேரதிர்ச்சி காத்திருக்கின்றது: இராயப்பு ஜோசப் எச்சரிக்கை!

15th of December 2013
இலங்கை அரசுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் பேரதிர்ச்சி காத்திருக்கின்றது' என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் மக்களுக்கான சகல உரிமைகளையும் வழங்காவிடின் சர்வதேச சமூகத்தால் இலங்கை அரசு தூக்கியெறியப்படும் காலம் தொலைவில் இல்லை' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்தவாரம் கத்தோலிக்க ஆயர் பேரவை விடுத்துள்ள சுற்றுநிரூப ஆவணத்தை இலங்கை அரச தரப்பினரும், சிங்கள இனவாதிகளும் விமர்சிப்பதை நிறுத்திவிட்டு நாட்டின் நலன் கருதி ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
குறிப்பாக நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும், அரசியல் தீர்வைக் காண்பதற்கு அரசானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுகளை ஆரம்பிக்கவேண்டும், மனித உரிமை மீறல்கள், உயிர் பறிப்புகள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணையை உடன் நடத்த வேண்டும்,
 
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குரிய நிர்வாகப் பொறுப்பை தமிழ் மக்களிடம் அளிக்கவேண்டும், அங்கு சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தவேண்டும், வடக்கு, கிழக்கில் சிவில் ஆளுநர்களை நியமிக்க வேண்டும், தேவையற்ற இராணுவத் தலையீடுகளை நிறுத்த வேண்டும், இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்ற வேண்டும், தமிழ் அரசியல் கைதிகளை விரைவில் விடுதலை செய்யவேண்டும்,
 
இறந்தவர்களை நினைவுகூர அனுமதிக்கவேண்டும், காணாமற்போனோர் தொடர்பில் தீர்வுகாணப்படவேண்டும் என பல முக்கிய விடயங்களை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தவேண்டும் எனக் கோரி கடந்த வாரம் கத்தோலிக்க ஆயர் பேரவையானது சுற்றுநிரூப ஆவணத்தை வெளியிட்டுள்ளது.
 
இலங்கை அரசு, மற்றவர்களின் அறிவுரைகளைக் கேட்காது தான்தோன்றித்தனமாகச் செயற்பட்டு வருவதால் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் அதற்கு அதிர்ச்சி காத்திருப்பது உறுதியாகின்றது.
அண்மையில் இலங்கை வந்த ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, பிரிட்டன் பிரதமர் கமரூன், ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பெயானி மற்றும் அமரிக்காவின் உயர்குழுவினர் ஆகியோர் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், போரால் பாதிக்கப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த தமிழ் மக்களையும், தமிழ் சிவில் சமூகத்தினரையும் நேரடியாகச் சந்தித்து தகவல்களை திரட்டிக்கொண்டு சென்றுள்ளனர்.
எனவே, உள்நாட்டில் நடைபெற்ற மனிதப் பேரவலங்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய சுயாதீன விசாரணையை நடத்திப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க இலங்கை அரசு உடன் முன்வரவேண்டும்.
இல்லையேல் சர்வதேச விசாரணையை இலங்கை அரசு எதிர்கொண்டே தீரும். அத்துடன் தமிழ் மக்களுக்கான சகல உரிமைகளையும் வழங்கி அவர்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்து நிம்மதியாக வாழும் சூழ்நிலையை இலங்கை அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என மன்னார் ஆயர் வலியுறுத்தி உள்ளார்.

No comments:

Post a Comment

Top Eng News Websites in links in

======================================================================== ===================================================================...