16th of December 2013
இலங்கை இராணுவம் யுத்த குற்றம் செய்யவில்லை . மனிதாபிமான ரீதியாக போர்
தொடுத்து யுத்தத்தை வெற்றி கொண்டது . இந்நிலையில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து இலங்கை மீது சர்வதேச பொய் யுத்தக்குற்றம் சுமத்துவது பாரிய அநீதியாகும் என தொழில் நுட்பவியல் ஆராய்ச்சி மற்றும் அணுசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார் .
தமிழ் நாடும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து இலங்கை வாழ் தமிழ் மக்களை இனவாதக்காரர்களாக மாற்றியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார் .
இலங்கைக்கான ஜப்பான் நாட்டின் விசேட சமாதான தூதுவர் யசூசி அகாஷியுடனான சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு எடுத்துரைத்தார் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது ;
2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது அப்பாவி தமிழ் மக்கள் 40 ஆயிரம் , 60 ஆயிரம் மற்றும் 1 இலட்சத்து 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுவதானது முற்றிலும் பொய்யானது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார் . புள்ளிவிபரத் திணைக்களத்தினூடாக 2011 ஆம் ஆண்டு வடக்கில் தமிழ் அதிகாரிகளினூடாக முன்னெடுக்கப்பட்ட கணிப்பீட்டை முன்வைத்தே அமைச்சர் இக்கருத்தை வெளியிட்டார் .
மேலும் வட மாகாணத்தில் இயற்கை மரணங்கள் தவிர்த்து உயிரிழந்தவர்கள் 7 ஆயிரத்து 974 பேராக உள்ள நிலையில் உயிரிழந்த இந்த நபர்களும் விடுதலை புலிகள் இயக்கத்தை சார்ந்தவர்களும் தற்கொலை செய்து கொண்டவர்களும் வேறு விதத்தில் உயிரிழந்தவர்களும் உள்ளனர் . இதே போல 2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் இயக்கத்தை சார்ந்தவர்கள் 5 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதுடன் 3 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டவர்களாகவே கருதப்படுகின்றது . அத்துடன் 3 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பணயக் கைதிகளாக விடுதலைப்புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன் குறித்த கைதிகளை விடுதலைப்புலிகளே கொன்று குவித்துள்ளனர் . இலங்கை இராணுவம் குறித்த பணயக் கைதிகளை மீட்க பெரும் முயற்சி எடுத்தது . இருப்பினும் முடியவில்லை .
இலங்கை இராணுவத்திற்கு அப்பாவி தமிழ் மக்களை கொல்வதாயின் இராணுவத்திடம் சரணடைந்த 11 ஆயிரம் பேரை கொன்று குவித்திருக்க முடியும் . ஆனால் இராணுவம் அவ்வாறு செயற்படவில்லை . மனிதாபிமான ரீதியாகவே இராணுவம் யுத்தத்தை வெற்றி கொண்டது . எனவே இலங்கை இராணுவம் யுத்த குற்றம் இழைத்ததாக சர்வதேசம் இலங்கையின் மீது யுத்த குற்றச்சாட்டுக்களை சுமத்துவது பாரிய அநீதியாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டார் .
இதேவேளை இச்சந்திப்பின் போது வடக்கின் சிங்கள மக்களை மீள் குடியேற்றம் செய்வதில் உள்ள பிரச்சினைகள் குறித்து யசூசி அகாஷியிடம் அவர் எடுத்துரைத்தார் .
1981 ஆம் ஆண்டு வடக்கில் 20 ஆயிரம் சிங்களவர்கள் வசித்து வந்த போதும் தற்போது 800 பேரே வடக்கில் உள்ளனர் . அத்துடன் விடுதலை புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட சிங்களவர்கள் தற்போது 46 ஆயிரம் பேரளவில் உள்ளனர் . இருப்பினும் இதுவரை குறித்த சிங்கள மக்களை மீள்குடியேற்றவில்லை . அத்துடன் வடகிழக்கிலிருந்து முழுமையாக விரட்டியடிக்கப்பட்ட சிங்களவர் 1 இலட்சத்து 50 ஆயிரம் பேராக காணப்படுகின்றனர் . இருப்பினும் 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொழும்பில் வசித்து வரும் நிலையில் யுத்தம் இடம்பெறும் சமயத்தில் தமிழ் மக்களுக்கு பெருமளவில் பாதிப்புக்கள் ஏற்படவில்லை .
அத்துடன் வடக்கு தமிழ் மக்களுக்கு அரசாங்கம் பல்வேறு சலுகைகள் வழங்கிய போதும் கடந்த வட மாகாண சபை தேர்தலின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு 43 சதவீதங்களாக தன்னுடைய வாக்கு வங்கியை அதிகரித்துள்ளது . இதனூடாக தமிழ் நாடும் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து தமிழர்களை இனவாதக்காரர்களாக மாற்றியுள்ளனர் .
இதேவேளை மாகாண சபை முறைமையானது ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் இந்திய இராணுவத்தினால் திணிக்கப்பட்டவையாகும் . வட மாகாண முதலமைச்சர் இவ்வதிகாரத்தை மோசமான முறையில் பிரயோகம் செய்கின்றார் . விடுதலை புலிகளின் தலைவர்கள் மேலைத்தேய நாடுகளை பாதுகாப்பதற்கு இவர் ஒத்துழைப்பு வழங்குகின்றார் . எனவே இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என்றார் .
No comments:
Post a Comment