Saturday, January 11, 2014

வலி. கிழக்கு பிரதேசசபை வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னணி!


Saturday,11th of January 2014
 தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரும், மாகாண சபை உறுப்பினருமாகிய அரியகுட்டி பரம்சோதியின் நேரடி வழிகாட்டலில், தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த 7 பேர் EPDP-ன் 5 உறுப்பினர்களுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலான வலி. கிழக்குப் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்தை முதல் முறையாக 3 மேலதிக வாக்குகளால் தோற்கடித்துள்ளனர்.
 
இதன்மூலம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலான வலி. கிழக்குப் பிரதேச சபை விசேட ஆணையாளரின் ஆட்சியின் கீழ் கொண்டுவரும் ஆரம்பகட்ட நிலையினைத் தோற்றுவித்துள்ளனர்.
 
திரு. மாவை சேனாதிராசா அவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலான பிரதேச சபைகளில் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், மாறாக தோற்கடிக்கும் வகையில் எதிர்த்து வாக்களிப்பவர்கள் மீது கட்சி கடும் நடவடிக்கை எடுக்குமென்ற பகிரங்க அறிக்கையைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தனிப்பட்ட கடிதமும் அனுப்பியிருந்தார்.
இதற்கமைய 27.12.2013 அன்று நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றுவதற்கான சிறப்புக் கூட்டத்தில் எதிர்த்து வாக்களிக்க எண்ணியிருந்த 7 பேரும் தவிர்த்துக் கொண்டனர். இதனால் ஈ.பி.டி.பி.யினரும் இக்கூட்டத்தினை தவிர்த்துக் கொண்டனர்.
 
இதன் பின்னர், மாகாண சபை உறுப்பினரான திரு.பரஞ்சோதியின் தூண்டுதலினால் அக்கூட்டத்திற்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற பொய்யான ஒரு நாடகத்தை மேற்கொண்டு, ஈ.பி.டி.பி.யினருடன் இணைந்து கையெழுத்திட்டு உள்ளூராட்சி அமைச்சரான முதலமைச்சருக்கு முறையீட்டை மேற்கொண்டனர்.
இதனால், இதுபற்றி விசாரிக்க முதல்வர் நியமித்த விசாரணைக்குழு அக்கூட்டம் திருப்திகரமாக நிறைவேற்றப்படவில்லை என்ற முடிவினை முதல்வருக்கு அறிவித்ததுடன், இன்று 10.01.2014 இல் தவிசாளர் தலைமையில் வரவு-செலவுத் திட்டம் மீண்டும் நிறைவேற்றப்பட வேண்டும் என பரிந்துரைத்திருந்தது.
 
இதனடிப்படையில், முதல்வர் உள்ளூராட்சி ஆணையாளருக்கு விடுத்த பணிப்பின் பேரில், உள்ளூராட்சி உதவி ஆணையாளரின் மேற்பார்வையில்
கூட்டம் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது.
 
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட உரும்பிராயைச் சேர்ந்த தமிழரசுக் கட்சி
உறுப்பினர், ஓய்வுபெற்ற ஆசிரியர் திருநாவுக்கரசு அவர்களை ஈ.பி.டி.பி உறுப்பினர் இராசநாயகம் தமது மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்ததும், கூட்டம் முடிந்ததும் உப தவிசாளரான நீர்வேலியைச் சார்ந்த சமாதான நீதவான் தர்மலிங்கம் அவர்களை ஈ.பி.டி.பி உறுப்பினர் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.
 
கூட்டத்தின் வாக்களிப்பின்போது, தவிசாளர் எனது 25 வருட நண்பனாக இருந்தபோதும் கட்சிக்கு கட்டுப்பட்டு எதிர்த்து வாக்களிக்கின்றேன் என்று உப தவிசாளரான தர்மலிங்கம் கூறியிருந்தார். இதுபற்றி அவரேதான் விளக்கம் கொடுக்க வேண்டும்.
 
இன்றைய கூட்டத்திற்கு முன்னர் தழிரசுக் கட்சியின் செயலாளர் திரு. மாவை சேனாதிராசா அவர்கள், வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் சபை முடக்கப்படும், உறுப்பினர்கள் அனைவரும் வீட்டுக்செல்ல நேரும், வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டு மக்களுக்கான சேவை தொடரப்பட வேண்டும் என்பதற்காகவே இக்கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்றவேண்டும் என்பதை எதிராக நிற்கும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்துமாறு பரஞ்சோதியிடம் பணித்திருந்தார்.
எனினும், மாவை சேனாதிராசா அவர்களின் வேண்டுகோளை அவர்கள் அலட்சியப்படுத்தி வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கபட்டமையால், பிரதேச சபை செயற்பாடுகள் விசேட ஆணையாளரின் கீழ் கொண்டுவரப்படும் நிலை தோற்றுவிக்கப்பட்ட துரதிஷ்டவசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று சபையின் தவிசாளர் திரு. அ.உதயகுமார் தெரிவித்தார்.


No comments:

Post a Comment