Saturday, January 4, 2014

சமாதானத்தை பாதுகாக்க அனைவரும் இன,மத பேதங்கள் இன்றி ஒருமித்து முன்னேறிச் செல்ல வேண்டும் – ஹத்துருசிங்க!

Sunday,5th of January 2014
இனிவரும் காலங்களில் இன மத ரீதியில் பிணக்குகள் ஏற்படுமாயின் இலங்கையில் அது மாபெரும் அழிவை ஏற்படுத்தும் எனவே தற்போதைய சமாதானத்தை பாதுகாக்க அனைவரும் இன மத பேதங்கள் இன்றி ஒருமித்து முன்னேறிச் செல்ல வேண்டும் என யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.
 
கடந்த நான்கு ஆண்டுகளாக யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதியாக கடமையாற்றி வந்த ஹத்துருசிங்க 6ஆம் திகதியுடன் இராணுவ தலைப்பீடத்திற்கு மாற்றலாகி செல்லவுள்ளார்.
 
அதனையடுத்து வசாவிளானில் நேற்று இடம்பெற்ற பிரிவு உபசார விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி எனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டேன். அந்தக் கால கட்டத்தின் சில மாதங்களுக்கு முன்னர் தான் யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. எனவே அந்த இக்கட்டான காலப்பகுதியில் பல்வேறு வழிகளிலும் மக்கள் விளைவுகளை சந்தித்திருந்தனர்.
 
எனவே அன்றைய கால கட்டத்தில் மக்களின் தேவைகளினை அறிந்து அதனை நிறைவேற்ற வேண்டிய தேவை எமக்கு இருந்தது. நான் பொறுப்பேற்ற பின்னர் மக்களது தேவைகளை அறிந்து அவர்களை அபிவிருத்திப்பாதையில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஒரு குறிக்கோளுடன் கடமையாற்றினேன்.
 
அதற்காக பொதுமக்கள் தொடர்பாடல் நிலையங்கள் அமைக்கப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊடாக மக்களுக்கு தேவையான விடயங்களை வழங்கி வந்தோம். இதன்காரணத்தினாலேயே தான் என்னை உங்களுக்கும் உங்களை எனக்கும் நன்கு தெரிந்திருக்க வாய்ப்பாக அமைந்தது.
எனினும் இராணுவத்தினர் எதிரிகளுக்கு எதிராகவே போராடினர். தமிழ் மக்களுக்கு எதிராக அல்ல இருப்பினும் மக்கள் மத்தியில் தங்களை அழித்தவர்கள் இராணுவத்தினர் என்ற கருத்து காணப்பட்டது. இதனால் இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவு நிர்கதியாகி இருந்தது. இருப்பினும் யாழ்.மாவட்ட மக்களுக்கு அவசியமாக இருக்கின்ற அபிவிருத்திகளை நாம் இராணுவத்தின் மூலம் வழங்கி நல்ல உறவினை கட்டியெழுப்பியுள்ளோம்.
 
மேலும் 2009 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை மேற்கொள்ளப்பட்டு வந்த அபிவிருத்தியில் பல செயற்படுத்தப்பட்டது. அத்துடன் குற்றங்கள் மற்றும் தேவையற்ற செயற்பாடுகள் என அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டு ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட நிர்வாக செயற்றிட்டம் தற்போது இங்கு காணப்படுகின்றது.
 
எனினும் இங்குள்ள மக்களுடைய கஷ்டங்களை நான் அறிவேன் எனவே கடந்த காலங்களில் ஏற்பட்ட விபரீதங்களை பார்த்து அவ்வாறு எதிர்வரும் காலங்களில் ஏற்படாத வகையில் இன மத குல பேதங்கள் எதுவும் இன்றி ஐக்கிய இலங்கைக்குள் நாம் வாழ அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் மதத்தலைவர்கள், வடக்கின் இராணுவ ஊடக இணைப்பாளர் மேஜர் மல்லவராட்சி, வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், மாநகர சபை உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந், மற்றும் பல இராணுவ உயரதிகாரிகள், ஊடகவியலாளர் எனப் பலரும் கலந்துகொண்டனர். அத்துடன், சாந்தன் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
 
இராணுவ தலைமையகத்தின் நிர்வாக நிறைவேற்று அதிகாரியாக இடமாற்றம் பெற்றும் செல்லும் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க எதிர்வரும் 9ஆம் திகதி தனது கடமைகளை தலைமையகத்தில் ஏற்கவுள்ளதுடன், கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக செயற்பட்டுவரும் மேஜர் ஜெனரல் உதய பெரேரா, யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக அதே தினத்தில் தனது பதவியினை ஏற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment