Thursday, January 2, 2014

காணாமற்போனவர்கள் தொடர்பில் புலம்பெயர் உறவுகள் முறையிடலாம். ஜனாதிபதி ஆணைக்குழுவின் - தலைவர் பரணகம!

Friday,3rd of January 2014
காணாமற்போனோர் தொடர்பாக புலம்பெயர் தமிழர்கள் முறைப்பாடுகளைத்
தெரிவிக்க இந்தமாத நடுப்பகுதியில் விசேட இணையத்தளம் ஒன்று உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது என காணாமற் போனோரைக் கண்டறிவதற்கான ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் தலைவர் பரணகம தெரிவித்தார் .
 அத்தோடு , இம்மாத இறுதிக்குள் வடக்கு , கிழக்கு போன்ற பகுதிகளுக்கு நேரடியாக பயணத்தை மேற்கொண்டு தகவல் திரட்டப்படவுள்ளதாகவும் , காணாமற்போனோரது உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்க ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் அவர் நேற்றுத் தெரிவித்தார் .
 அவர் மேலும் தெரிவிக்கையில் ,
 ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவிற்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்துக் கொண்டு வருகின்றன . முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளும் திகதி இன்றுடன் ( நேற்றுடன் ) முடிவடைந்தாலும் இனி வரும் காலங்களில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளையும் நாம் நிராகரிக்க மாட்டோம் . அவை தொடர்பிலும் நாம் ஆராய்வோம் .
 இதுவரையிலும் 11 ஆயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன . இப்போதே இவை தொடர்பில் சுயாதீன விசாரணைகளை நாம் ஆரம்பித்து விட்டோம் .
 அத்தோடு , ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இரு தடவைகள் காணாமற்போனோரின் உறவினர்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடி தகவல்களைப் பெறவுள்ளோம் .
 அதுமட்டுமன்றி , புலம்பெயர் தமிழர்களும் முறைப்பாடுகளைத் தெரிவிக்க விசேட ஏற்பாடுகளை செய்யவுள்ளோம் . அதாவது , ஜனவரி மாத நடுப்பகுதியில் இணையத்தளம் ஒன்றை உத்தியோகப் பூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளோம் .
இதன் மூலம் இலகுவாகவும் , விரைவாக தகவல்களை பெறமுடிவதோடு பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் .
அத்துடன் , வடக்கு , கிழக்கு ஆகிய பகுதிகளுக்கும் இம்மாதத்திலிருந்து தொடர் பயணங்களை மேற்கொண்டு தகவல்களைத் திரட்டவுள்ளதுடன் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்கவும் ஏற்பாடு செய்யப்படவுள்ளது " என்றார் .

No comments:

Post a Comment