22nd of December 2013
சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் திருகோணமலை நகரில் காணாமற் போனோரின்
உறவுகள் நடத்திய கவனயீர்ப்புப் போராட்டத்தின் மீது இராணுவப் புலனாய்வாளர்கள் மற்றும் காடையர்கள் குழு நடத்திய காட்டு மிராண்டித்தனமான தாக்குதல் குறித்த ஆவணம் ஐ . நாவிடம் நாளை திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது .
கொழும்பில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்திடம் காணாமல்போனோரைத் தேடியறியும் குழு இந்த ஆவணத்தைக் கையளிக்கவுள்ளது .
இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் இந்த ஆவணம் , ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கும் , ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ - மூன் , ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்படும் .
காணாமல்போனோரைத் தேடியறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் இந்தத் தகவலை நேற்று உறுதிப்படுத்தினார் . இந்த ஆவணத்தில் திருமலைத் தாக்குதல் குறித்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன .
அத்துடன் காணாமற் போனோர் மற்றும் அவர்களைத் தேடும் உறவுகளுக்கு நீதியைப் பெற்றுத் தருமாறும் , இலங்கையில் உள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது .
திருமலைத் தாக்குதலில் காணாமற் போனோரின் உறவுகள் , காணாமற் போனோரைத் தேடியறியும் குழுவின் பிரதிநிதிகள் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் , மனித உரிமை ஆர்வலர்கள் எனப்பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .
இதேவேளை , திருமலையில் காணாமற் போனோரின் உறவுகளின் கவனவீர்ப்புப் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது அதனைத் தடுத்து நிறுத்தாது தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஒத்தாசை வழங்கிய திருகோணமலை தலைமையகப் பொலிஸாரின் செயல் குறித்து கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் நேற்று முன்தினம் முறையிடப்பட்டுள்ளதாக சுந்தரம் மகேந்திரன் தெரிவித்தார்
No comments:
Post a Comment