Monday, December 2, 2013

நிலவில் இறங்கி ஆராய ஆளில்லா விண்கலத்தை அனுப்பியது சீனா!

3rd of December 2013
பீஜிங்::நிலவில் இறங்கி ஆய்வு செய்வதற்காக ‘சேஞ்ச்-3’ என்ற ஆளில்லா விண்கலத்தை சீனா நேற்று முன்தினம் இரவு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.  விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவுடன் இணைந்து செயல்படவும் சீனா விருப்பம் தெரிவித்துள்ளது. நிலவில் இறங்கி ஆய்வு செய்வதற்காக ‘சேஞ்ச்-3’ என்ற விண்கலத்தை ‘லாங் மார்ச் 3பி’ ராக்கெட் மூலம் சீனா நேற்று முன்தினம் இரவு விண்ணில் செலுத்தியது. நிலவில் இறங்கி ஆராயும் சீனாவின் முதல் முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.  இது குறித்து இத்திட்டத்தின் சீன ஆய்வுக் குழுவின் துணை கமாண்டர் லீ பென்செங் கூறியதாவது:

மிக சக்திவாய்ந்த லாங் மார்ச்-3பி ராக்கெட் மூலம் சேஞ்ச்-3 என்ற விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இது தற்போது புவி சுற்றுவட்டபாதையில் திட்டமிட்ட இலக்கில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விண்கலம் இந்த மாத மத்தியில் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிலவில் கால் பதிக்கும் சீனாவின் முதல் விண்கலம். நிலவில் இறங்கி ஆராய்ச்சி செய்வதற்காக, இந்த விண்கலத்தில் ரோபோடிக் ரோவர், டெலஸ்கோப் ஆகியவை உள்ளது.

சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி எந்த நாட்டுடனும் போட்டியிடுவதற்காக நடத்தப்படவில்லை. விண்வெளி ஆராய்ச்சியில் பிறநாடுகளின் ஒத்துழைப்பை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். குறிப்பாக இந்தியா போன்ற அண்டை நாடுகளுடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட சீனா விரும்புகிறது. இவ்வாறு லீ கூறினார்.

No comments:

Post a Comment