ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று மனித உரிமைகள் குறித்த கவனயீர்ப்புப் போராட்டமொன்றை அமைதியான முறையில் நடத்தியிருந்தோர் மீது இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலைக் கண்டித்து திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அதிமேதகு ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கட்கு,
ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் தினமாகிய கடந்த டிசம்பர் 10ஆம் திகதியன்று திருகோணமலையில் பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் அமைதிவழிப் போராட்ட மொன்று நடத்தப்பட்டது.
தங்களின் மனித உரிமைகள் பாரியளவில் பறிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கவனத்தை ஈக்கவும், தங்களின் தற்போதைய அவல நிலைக்குப் பரிகாரம் தேடுவதற்குமென காணாமற்போனோரின் பெற்றோர், வாழ்க்கைத்துணைகள் மற்றும் நெருங்கிய உறவினர்களால் அமைதிவழி ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. அதில் சிவில் சமூக மற்றும் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். முற்றுமுழுக்க அமைதியான முறையில் நடைபெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தோர் நீதி வழங்குமாறு கோரும் சுலோக அட்டைகளை ஏந்திய வண்ணம் சென்று கொண்டிருந்தனர். ஸ்தலத்தில் பொலிஸார் சிலரும் பிரசன்னமாகியிருந்ததாக நான் அறிகின் றேன்.
சிறிது நேரத்தின் பின்னர், துணியால் தங்கள் முகங்களை மூடிமறைத்துக் கொண்டிருந்த ஒரு சிலர் உள்ளிட்ட சில நபர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதலை ஏவியும் கைகளால் அவர்களைத்தாக்கியுமுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்திவந்த சுலோக அட்டைகளும் பறிக்கப்பட்டு சுக்கு நூறாக கிழித்தெறியப்பட்டுள்ளன. அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தக் கூடாதென மேற்படி அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபட்டோர் எச்சரிக்கப்பட்டதுடன் அவர்களில் சிலர் காயங்களுக்கும் உள்ளாகினர்.
அமைதியான முறையில் போராடியோர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தகைய தாக்குதல் சம்பவமானது, அக்கிரமமானது மட்டுமின்றி, எதேச்சாதிகார அணுகுமுறை யொன்றை பிரதிபலிக்கும் நடவடிக்கையொன்றாகவும் அமைவதுடன், மனித உரிமைகள் தினத்தன்று மனித உரிமைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் போராடிய தங்கள் மக்களின் உரிமைகளைப் பறித்தெடுக்கும் மிகவும் பாரியதொரு மனித உரிமை மீறல் சம்பவமாகவும் அமைந்துள்ளது. அத்துடன், நாட்டில் சட்டவாட்சி முற்று முழுதா கவே சீர்குலைந்துள்ளதையும் இச்சம்பவம் காண்பிக்கின்றது.
இந்த பாரதூரமான மனித உரிமை மீறல் சம்பவம் குறித்து பொருத்தமான நடவடிககை எடுக்கப்படுமென்ற அதீத எதிர்பார்ப்பில், தங்களின் கவனத்திற்கு இதனைக் கொண்டுவரு வது எனது தார்மீகக் கடமையென நான் கருதுகின்றேன்.
No comments:
Post a Comment