22nd of December 2013
இலங்கையில் 13 வது அரசியலமைப்புத் திருத்த வரையறையை தாண்டிய அரசியல் தீர்வுத்
திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது
இந்த விடயத்திற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டால் அதில் பங்கெடுப்பது பற்றி நிச்சயமாக பரிசீலிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா . சம்பந்தன் தெரிவித்துள்ளார் .
13 ஆம் திருத்தத்துக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களும் இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் நியமித்த தெரிவுக்குழுக்களும் நிபுணர் குழுக்களும் 13 ஆம் திருத்தத்துக்கு அப்பால் சென்ற அரசியல் தீர்வினை பரிந்துரை செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
வரவுசெலவுத் திட்ட நிறைவுரையின்போது ஜனாதிபதி விடுத்திருந்த அழைப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இதனைக் கூறியுள்ளார் .
' ஜனாதிபதியின் அழைப்பை தமது கூட்டமைப்பு கவனமாக பரிசீலிப்பதாகவும் தெரிவித்த இரா சம்பந்தன் , உள்நாட்டிலேயே பிரச்சனையை தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமாகவும் விசுவாசமாகவும் செயற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார் .
அரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளின்போது முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு இதுவரை ஆக்கபூர்வமான பதில் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார் .
பின்னர் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின்போது எட்டப்பட்ட உடன்பாடுகளும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார் .
'13 ஆம் திருத்தத்தை முற்றாக இல்லாது செய்வதற்கான அல்லது அதிகாரங்களைக் குறைப்பதற்கான ' தெரிவுக்குழுவில் இடம்பெற முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் குறிப்பிட்டதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது
ஒரு நியாயமான அரசியல்தீர்வை எட்டுவதற்கான பேச்சுவார்த்தையாக இருந்தால் , ' ஜனாதிபதியின் அழைப்பை ஒருபோதும் தாம் நிராகரிக்கப் போவதில்லை என சம்பந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளார் .
No comments:
Post a Comment