17th of December 2013
ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச்சில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கூட்டத்தொடரில் கடும் இராஜதந்திர நெருக்கடிகளை எதிர்நோக்கவுள்ள இலங்கை அரசு , அத்தகைய நெருக்கடிகளைச் சமாளிக்கும் வகையில் விசேட செயற்றிட்ட அறிக்கையொன்றை தயாரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
குறித்த அறிக்கையில் , நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விதம் , வடமாகாண சபையை நிறுவி அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் , போர்க்கால இழப்பீட்டு தொடர்பில் முன்னெடுக்கப்படும் மதிப்பீட்டு நடவடிக்கை , காணாமற் போனோர் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழு உட்பட முக்கிய பல அம்சங்களை உள்ளடக்குவதற்கு அரச உத்தேசித்துள்ளது .
இந்தச் செயற்றிட்ட அறிக்கையை அடிப்படையாக வைத்தே , மனித உரிமைகள் சபையில் ஜப்பான் , சீனா , ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் நல்லிணக்கத்தை நோக்கி பயணிப்பதற்கு தமக்கு மேலும் கால அவகாசம் தேவை என்ற கோரிக்கையையும் இலங்கை தூதுக்குழு விடுக்கவுள்ளது .
இதற்கு சில ஆபிரிக்க நாடுகளும் ஆதரவு காட்டியுள்ளன என்று தெரியவருகின்றது . எனினும் , இது தொடர்பில் அரச தரப்பு இன்னும் உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுக்கவில்லை .
இதற்குப் புறம்பாக ஜெனிவா இராஜதந்திரச் சமரை எதிர்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சும் திட்டங்களை வகுத்துவருகின்றது . யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு பாதுகாப்புத் தரப்பு எட்டு ஆவணப்படங்களைத் தயாரித்துள்ளது .
இந்த ஆவணப்படங்கள் தற்போது தயாரிக்கப்படவில்லை . முன்கூட்டியே தயாரிக்கப்பட்டுவிட்டன . இதனை இராணுவத்தின் இணையத்தளத்தில் பார்வையிடலாம் " என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரூவான் வணிகசூரிய நேற்று " சுடர் ஒளி ' யிடம் தெரிவித்தார் .
இலங்கை இராணுவத்துக்கு எதிராக யுத்தக்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் , இறுதி யுத்தகாலத்தில் இராணுவத்தினர் முன்னெடுத்த மனிதாபிமான நடவடிக்கை என்ற தொனியிலேயே இந்த ஆவணப் படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன .
இது தொடர்பில் கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டு வருகின்றன . அத்துடன் , ஜெனிவா தொடர் குறித்து வெளிவிவகார அமைச்சும் பலகோணங்களில் இராஜதந்திர நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது .
இதன் ஓர் அங்கமாக இலங்கை இராஜதந்திரிகள் சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கத்துவ நாடுகளிடம் பேச்சு நடத்தவுள்ளனர் என்று தெரியவருகிறது .
அதேவேளை , இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுகின்றனவா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை வந்திருந்த மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை , மார்ச் மாத அமர்வின்போது இது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார் .
இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே இலங்கை மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது .
மனித உரிமைகள் பேரவையில் இம்முறையும் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படலாம் . பொருளாதாரத் தடைவிதிக்கும் அதிகாரம் பாதுகாப்பு சபைக்கே இருக்கின்றது . எனினும் , அதில் அங்கம் வகிக்கும் வீட்டோ அதிகாரமுடைய சீனா , ரஷ்யா ஆகிய நாடுகள் இலங்கையுடன் இருப் பதால் பொருளாதாரத் தடை என்பது சாத்தியமாகாது " என்று கூறினார் அரசியல் நிபுணரான கலாநிதி வசந்த பண்டார .
இதற்கிடையில் புலிகள் ஆதரவு அமைப்புகளும் மனித உரிமைகள் அமைப்புகளும் , அரச சார்பற்ற அமைப்புகளும் இலங்கைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற பரப்புரையை ஆரம்பித்துள்ளமை அரசுக்கு பெரும் தலையீடாக மாறியுள்ளது .
No comments:
Post a Comment