Monday, December 16, 2013

கூட்டமைப்பின் வலி. கிழக்கு பிரதேசசபை உறுப்பினர்களை மாவை, சுரேஸ் அவசரமாக சந்திப்பு. பட்ஜெட்டை ஆதரிக்குமாறு நிர்ப்பந்தம்!

16th of December 2013
வலிகாமம் கிழக்கு பிரதேசசபை தவிசாளர் மீது உறுதிப்படுத்தப்பட்ட 24 குற்றச்சாட்டுகளை சுமத்தி சபையின் ஆளுங்கட்சி (கூட்டமைப்பு), எதிர்க்கட்சி (ஈ.பி.டி.பி) உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுக்கு மகஜர் கையளித்திருந்ததும், 21.11.2013 அன்று 2014 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தோற்கடிக்கப்பட்டதும் யாவரும் அறிந்ததே.
எதிர்வரும் 19.12.2013 அன்று மறுபடியும் முன்வைக்கப்படவுள்ள குறித்த பட்ஜெட் தோற்கடிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவே எதிர்வு கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் யாழ் மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 10.00 மணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை. சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோருக்கும், வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் வடமாகாண சபை அவைத்தலைவர் சிவஞானம், மாகாணசபை உறுப்பினர் பரஞ்சோதி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

சுமார் 2 மணித்தியாலங்கள் வரை நடந்த இந்த சந்திப்பில் தவிசாளர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை தாம் பின்னர் ஆற அமர விசாரிப்பதாகவும் அதற்கு இப்போது அவசரம் இல்லை என்றும் மாவை சேனாதிராஜா தெரிவித்ததோடு, முதலில் நீங்கள் இந்த பட்ஜெட்டை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று உறுப்பினர்களை நிர்ப்பந்தித்ததோடு ஆதரிக்காவிட்டால் உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றும் உறுப்பினர்களை எச்சரிக்கை செய்துள்ளார்.

கூட்டமைப்பு கைப்பற்றிய உள்ளூராட்சி சபைகளில் மிகவும் கீழ் மட்ட அடைவுகளை உடைய ஒரே சபை வலி. கிழக்கு பிரதேச சபைதான். எனவே ஆளுமை உள்ள மாற்று தவிசாளரை நியமித்து வினைத்திறன் மிக்க சபையாக மாற்றியமைத்து மக்களுக்கு சேவையை வழங்குவதே  கடமை என்பதை கவனத்தில் கொள்ளாது, சபை எப்படி வேண்டுமானாலும் இயங்கட்டும். மக்களுக்கு சேவை கிடைக்குதோ, இல்லையோ பட்ஜெட் வெல்லப்படவேண்டும் என்பதில் மட்டும் மாவை, சுரேஸ் ஆகியோர் உறுதியாகவிருந்து பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு தம்மை நிர்ப்பந்திப்பது தொடர்பில் உறுப்பினர்கள் கடும் அதிருப்தியும் விசனமும் அடைந்துள்ளனர்.

வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் அன்னலிங்கம் உதயகுமார் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனின் பிரத்தியேக செயலாளர் என்பதும், ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் ஆசன ஒதுக்கீட்டின் ஊடாக அரசியலுக்குள் பிரவேசித்தவர் என்பதும், யாழ் மாவட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கைப்பற்றிய ஒரே ஒரு பிரதேசசபை வலி. கிழக்கு பிரதேசசபை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Top Eng News Websites in links in

======================================================================== ===================================================================...