Monday, December 16, 2013

வடக்கு ஆளுநர் பிரச்சினை குறித்து விக்னேஸ்வரனுடன் கதைப்பேன் – மனோவிடம் ஜனாதிபதி!

17th of December 2013
தமிழ் தேசிய கூட்டமைப்பின், முதலமைச்சர் விக்னேஸ்வரனும், ஆளுனர் சந்திரசிறியும் 13ம் திருத்தத்தின் பிரகாரம் கூட்டு குடித்தனம் செய்ய வேண்டியவர்கள்.
 
ஆனால், இன்று இந்த கூட்டு குடித்தனம் நடைபெறவில்லை. அங்கு முரண்பாடு முற்றி விவாகரத்தாகும் நிலைமை உருவாகிவருகிறது. வடக்கின் மக்கள் ஆணையை பெற்ற முதல்வரும், நிறைவேற்று அதிகாரத்தின் ஆணையை பெற்றுள்ள சந்திரசிறியும் இன்று முரண்பட்டு கொள்கிறார்கள்.
 
இந்நிலையை நீடிக்க விடாதீர்கள். நிலைமை மென்மேலும் பாரதூரமடைந்து, இந்நிலவரங்களின் கீழ் பணியாற்ற முடியாது என முதல்வர் தனது பதவியை ஒருவேளை இராஜினாமா செய்து விடுவாரோ என நான் அச்சப்படுகிறேன். இது அவரது நிலைப்பாடு அல்ல. இது எனது அச்சம்.
 
அப்படியான ஒரு சாத்தியத்தை நான் விரும்பவில்லை. ஆனால், நாட்டில் புதிய நெருக்கடி உருவாகக்கூடாது என விரும்பும் ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையிலான எனது அச்சம் இதுவாகும். இதை நாட்டின் ஜனாதிபதியான நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்தார்.
 
மனோ கணேசனின் பிறந்த நாளையொட்டி அவரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உரையாடியபோதே, மனோ இந்த கருத்தை ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.
 
நாட்டின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை அரசாங்கத்துக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் அரசியல்ரீதியாக நடைபெற வேண்டும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு. ஆனால், தேசிய இனப்பிரச்சினை தீர்வு வரும்வரை மாகாண நிர்வாகம் காத்திருக்க முடியாது.
 
நாட்டின் ஜனாதிபதியின் கவனத்தின் கீழ் அவரது பிரதிநிதியான ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் மாகாண நிர்வாகம் தொடர்பிலான நிர்வாக ரீதியான பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும் என நான் விரும்புகிறேன். வட மாகாண நிர்வாகத்தை நடத்தும் செயலாளர்கள் மாற்றப்படுவது உட்பட பல முடிவுகள் ஒருதலைபட்சமாக எடுக்கப்படுகின்றன.
 
இவை நிர்வாகத்தை குழப்புகின்றன. மாகாண நிர்வாகம் சுமூகமாக நடைபெற வேண்டும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன் எனவும் தொடர்ந்து மனோ கணேசன், மஹிந்த ராஜபக்ஷவிடம் கூறினார்.
 
இதற்கு பதிலளிக்கும் விதமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாவது;
முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவியில் இருக்க வேண்டும். நீங்கள் சொல்வதுபோல் அவர் பதவி விலகும் சாத்தியம் ஏற்பட்டால் அது நாட்டுக்கு நல்லது அல்ல. நான் யாழ்ப்பாணம் சென்று அவரை சந்திப்பேன். அல்லது விக்னேஸ்வரனை கொழும்பு வரும்படி அழைப்பு விடுகிறேன். எனது செயலாளர் லலித் வீரதுங்கவிடம் இன்று இதுபற்றி பணிப்புரை விடுப்பேன்.
 
வடமாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறும் என்று தெரிந்துகொண்டுதானே நான் வடக்கு தேர்தலை நடத்தினேன். அந்த மாகாணசபை சுமூகமாக நடக்க வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன் என்பதை தமிழ் மக்களுக்கு சொல்லுங்கள்.
ஆளுநரும், முதல்வரும் முரண்படகூடாது. ஒருவரை, ஒருவர் அனுசரிக்க வேண்டும். செயலாளர்களை மாற்றுவது பற்றி எனக்கு சரியான தகவல்கள் இல்லை. இவை என்னிடம் நேரடியாக சொல்லப்பட வேண்டும்.
 
மாகாணசபை நிதி ஒழுங்குகள் பற்றிய சட்டம் இருக்கிறது. அதை இரு சாராரும் கடைப்பிடிக்க வேண்டும். இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் அக்கறை கொண்டு என்னிடம் ஆரம்பத்தில் கூறியுள்ளார். முதல்வரிடம் இதுபற்றி நான் உடனடியாக உரையாடுகிறேன்.
 
இதை அவர்களுக்கு சொல்லுங்கள். தமிழ் மக்களிடமும் சொல்லுங்கள். இன்னொன்றையும் அவர்களிடம் சொல்லுங்கள். வடமாகாணசபையை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள், வடக்கின் பாடசாலைகளுக்கு சென்று இனவாதம் கக்கும் பரப்புரைகளை செய்கிறார்கள் என எனக்கு தெரியவந்துள்ளது.
 
தமிழ், சிங்கள இனத்தவர் மத்தியில் இனவாத பிளவை ஏற்படுத்த இவர்கள் முயற்சி செய்கிறார்கள். இனவாத பிரச்சாரத்தை பாடசாலை மாணவர் மத்தியில் செய்ய வேண்டாம் என்று அவர்களுக்கு எடுத்து கூறுங்கள் என்றார்.

No comments:

Post a Comment

Top Eng News Websites in links in

======================================================================== ===================================================================...