18th of December 2013
காணி உரிமைகள் தொடர்பில் மத்திய அரசாங்கமே இறுதி முடிவெடுக்குமென காணி மற்றும் காணி அபிவிருத்தியமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசாங்கத்தின் காணி விவகார அமைச்சுக்கு உரியது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் எழுப்பிய வினாவிற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மாகாண காணி ஆணையாளர்கள் இறுதியாக தமது முடிவு தொடர்பில் காணி அமைச்சரிடம் அனுமதி பெற வேண்டுமெனவும் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு பகுதியில் காணிகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதில் வழங்கிய அமைச்சர் மாவட்டத்திலுள்ள 62 ஹெக்டேயர் பரப்பளவுள்ள 11 காணிகள் அனுமதிப் பத்திரம் பெற்றோருக்கும், சுவணர்பூமி திட்டத்தின் கீழ் பகிரப்பட்டதாக குறிப்பிட்டார்.
இந்நிலையில் குறித்த காணிகள் அரச திணைக்களங்களுக்கு தேவைக்கேற்ப வழங்கப்பட்டன. அவை காணி சட்டங்களுக்கமையவே வழங்கப்பட்டதாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் குறிப்பிட்டார்.
இதேவேளை நிலங்களின் வினைத்திறன்மிக்க பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட 55 ஏக்கர் அரச காணியை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு நன்கொடையாக வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த காணி நகர அபிவிருத்தி அதிகார சபையினால் அபிவிருத்தி செய்யப்படுமென அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment