Friday, January 3, 2014

இராணுவத்தினரை வெளியேற்றிவிட்டு மக்களை மீள்குடியமர்த்துவதற்கான அதிகாரம் தன்னிடம் இல்லை- மீள்குடியேற்ற அமைச்சர்!

Saturday,4th of January 2014
இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கின்ற காணிகளிலிருந்து இராணுவத்தினரை வெளியேற்றிவிட்டு மக்களை மீள்குடியமர்த்துவதற்கான அதிகாரம் தன்னிடம் இல்லை என்றும், தன்னால் முடியாதென்றும் யாழில் இடம்பெற்ற மீள்குடியமர்வு கூட்டத்தில் மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ண வீரக்கோன்.
இதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அமைச்சர் வீரக்கோன், இங்குள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பித்து அவருடன் கலந்துரையாடியே தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
யாழ். மாவட்டத்தின் மீள்குடியேற்றம் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ண வீரக்கோன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார் மற்றும் சில்வெஸ்டர் அலென்டின் பிரதேச செயயலர்கள் மீள்குடியேயற்ற அமைச்சின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
 
இந்தக் கலந்துரையாடலின் போது மாவட்டத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய பிரதேசங்கள் மற்றும் இராணுவத்தினரால் கையகப்படுத்தி வைத்திருக்கின்ற பொதுமக்களுடைய நிலங்கள் மற்றும் குடியமர்த்தப்பட்ட மக்களுடைய அடிப்படைத் தேவைகள் என்பன தொடர்பாக ஆராயப்பட்டது.
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டு பல்வேறு இடங்களிற்கும் சென்றுள்ளதோடு, மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவிகளையும் வழங்கி வந்திருக்கின்றேன். அத்தோடு மீள்குடியேற்றப்பட வேண்டிய மக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியிருப்பதுடன், அப்பகுதிகளையும் பார்வையிட்டிருக்கின்றேன் என அமைச்சர் வீரக்கோன் தெரிவித்தார்.
 
இந்நிலையில், நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களுடைய அடிப்படைத் தேவைகள் மற்றும் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டிய மக்கள் தொடர்பாகவும், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்ற நிலங்கள் தொடர்பாகவும் இதனை விடுவக்கப்பட வேண்டிய அவசியம் குறித்தும் அமைச்சரிடம் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
 
இங்கு இரானுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கின்ற நிலங்களை என்னால் விடுவிக்க முடியாது. இதற்கான அதிகாரமும் என்னிடம் இல்லை. ஆகவே, இங்குள்ள நிலைமைகள் தொடர்பாக அமைச்சரவைக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவே என்னால் முடியும்.
 
இதனை விடுத்து தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் என்னிடம் இல்லை. இருந்தும் இங்குள்ள பிரச்சினைகள் மற்றும் நிலைமைகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியுடன் பேசி ஜனாதிபதியே இறுதி தீர்வுக்கான முடிவை எடுக்க முடியும். இதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment