Friday, January 3, 2014

மக்களுடைய காணிகள் மக்களிடமே கையளிக்கப்பட வேண்டும்- சந்திரகுமார் எம்.பி!

Saturday,4th of January 2014
மக்களுடைய காணிகள் மக்களிடமே கையளிக்கப்பட வேண்டும். மக்களுடைய காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
 
கோப்பாய் அச்சுவேலி அக்கரைக் கிராமத்தில் இடம்பெற்ற வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
இங்கு நீண்ட காலமாக இடம்பெயர்ந்திருக்கின்ற மக்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். அதேவளையில், இவ்வாறு இடம்பெயர்ந்திருக்கின்ற மக்கள் குறிப்பிட்டளவானோர் மீளக் குடியமர்த்தப் பட்டிருக்கின்ற நிலையில், தற்போதும் குறிப்பிட்டளவானோர் முகாம்களிலும் நண்பர், உறவினர் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு இடம்பெயர்ந்திருக்கின்ற மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
 
இந்நிலையில், இடம்பெயர்ந்திருக்கின்ற மக்கள் சொந்த இடங்களில் தான் குடியமர்த்தப்பட வேண்டுமென்பதால் எந்த வித மாற்றுக் கருத்துக்களும் இல்லை. இவ்வாறு குடியமர்த்தப்படுகின்ற மக்களுக்கு அடிப்படை வாழ்வாதார உதவிகளை ஏற்படுத்திக் கொடுத்து அதனை வழங்குவது எமது பொறுப்பாகும்.
 
யுத்தத்திற்குப் பின்னரான வடபகுதியில் அபிவிருத்தியிலும், வாழ்வாதார ரீதியிலும் அதிகளவில் மேம்பாடு காணப்பட்டுள்ளது. ஆயினும், இதனைக் குழப்புவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். அதாவது, மக்கள் மத்தியில் மீண்டும் பதற்றமான நிலையை ஏற்படுத்தி, அவர்களை மீளவும் அழிவுப்பாதைக்கு கொண்டு செல்வதற்கே என்றும் சாடியுள்ளார்.
 
இவ்வாறு மக்களைக் குழப்பி, தீவிர உணர்ச்சிவசப்பட்ட கருத்துக்களைத் தெரிவித்துவிட்டு, மக்கள் பாதிக்கப்படுகின்ற போது அல்லது அழிவை நோக்கிச் செல்கின்றபோது மக்களை நடுத்தெருவில் விட்டு விட்டு ஓடிவிடுவார்கள். ஆனால், நாம் மக்களுடன் மக்களாகவே இருந்து வருகிறோம்.
 
ஆகவே, சமகாலத்தில் எமது சம உரிமையைப் பெற்று நாம் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் வாழ வேண்டும். எமது சொந்த நிலத்தில் நாம் சென்று வாழ்வது எமது வாழ்வுரிமை. அந்த வாழ்வுரிமை எமக்குக் கிடைக்க வேண்டும். அதாவது, சொந்த மண்ணில், சொந்தக் கிராமத்தில் வாழ்வது தான் உண்மையான சமாதானத்தின் வெற்றியாகும் என்றார்.
 
ஆகவே, இராணுவத்தினர் வைத்திருக்கின்ற பொது மக்களுடைய காணிகள்
அவர்களிடமே கையளிக்கப்பட வேண்டுமென்றும் இடம்பெயர்ந்திருக்கின்றவர்கள் அவர்களுடைய சொந்த நிலங்களிலேயே குடியமர்த்தப்பட வேண்டுமென்றும் கோரினார்.

No comments:

Post a Comment