Monday, December 23, 2013

வரவுசெலவுத்திட்டத் தோல்விகளும் ஒத்திவைப்புக்களும்- புதியதெிரிவுகளும்!

23rd of December 2013
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள பல உள்ளூராட்சி மன்றங்களின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இரண்டு தடவைகள் தோற்கடிக்கப்பட்டுள்ளன.இந்த நிலையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த அறிவிப்பினை மேற்கொண்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டம் கடந்த புதன்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போதே ஜனாதிபதி இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.

இதனால் உள்ளுராட்சி மன்றங்களின் வரவு-செலவுத் திட்டம் இரண்டு தடவைகள் தோற்கடிக்கப்பட்டாலும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் பதவி விலக தேவையில்லை என்றும் அவர்கள் தொடர்ச்சியாக குறித்த பதவியில் இருக்க கூடிய வகையிலேயே சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள மதவாச்சி , ராஜாங்கன , உடுதும்பர , ஹங்குராங்கெத்த , ஜா-எல , தொம்பே மற்றும் பென்தொட்ட ஆகிய பிரதேச சபைகள் உள்ளிட்ட ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இரண்டு தடவைகள் தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.

புளத்சிங்கள, தமன பிரதேச சபைகளும் தோல்வி

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தின் கீழிருக்கின்ற புளத்சிங்கள மற்றும் தமன ஆகிய இரு பிரதேச சபைகளுக்குமான வரவு-செலவுத்திட்டங்களும் தோற்கடிக்கப்பட்டுள்ளன.

புளத்சிங்கள பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம்  10 வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவு- செலவுத்திட்டத்தை சமர்ப்பித்த தலைவர் மட்டுமே ஆதரவாக வாக்களித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எட்டுபேரும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மூவரும் எதிராக வாக்களித்தனர்.

இதேவேளை, தமன பிரதேசபையின் வரவு-செலவுத்திட்டம் நான்கு வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வரவு-செலவுத்திட்டத்தை சமர்ப்பித்த தலைவர் மட்டுமே திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார். ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த இருவர் வாக்களிப்பதிலிருந்து விலகிநின்றனர்.

வாக்களிக்காத ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் சுஜீவ விஜயசிங்க தனது இராஜினாமா கடிதத்தை தலைவரிடம் கையளித்தார்.
 
வரவு - செலவுத் திட்டம் தோற்ற உள்ளூராட்சி சபைகளுக்கு புதிய தலைவர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்-.
 
2014ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தை தோற்கடித்த மூன்று உள்ளூராட்சி சபைகளுக்கான புதிய தலைவர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். 
இதன்படி புதிய தலைவர்களது பெயர்கள் தேர்தல்கள் திணைக்களத்துக்கு இன்று (23.12.13) வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 
வரவு - செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்ட அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் புதிய தலைவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். 
இதேவேளை வரவு - செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் தமது செயற்பாடு குறித்து விளக்கமளிக்குமாறு கடிதம் மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 
 
கல்முனை மாநகர சபையின் வரவு-செலவுத் திட்டம் ஒத்திவைப்பு:
 
கல்முனை மாநகர சபையின் வரவு-செலவுத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கல்முனை மேயர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
 
கல்முனை மாநகர சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இன்று திங்கட்கிழமை (23.12.13) பி.பி 2.30 மணிக்கு மேயர் நிசாம் காரியப்பாரினால் சமர்ப்பிக்கப்படவிருந்தது.
இந்த நிலையிலேயே மாநகர சபையின் கூட்டம் 31ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என இன்று பிற்பகல் ஒரு மணியளவில் மேயர் நிசாம் காரியப்பர் அறிவித்திருந்தார்.
கல்முனை மேயராக நிசாம் காரியப்பர் நியமிக்கப்பட்ட பின்னர் சமர்ப்பிக்கப்படவுள்ள முதலாவது வரவு-செலவுத் திட்டம் இதுவென்பது குறிப்பிடத்த்தக்கதாகும்.
 
இதேவேளை, கல்முனை மாநகர சபையின் வரவு-செலவுத் திட்டத்திற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிப்பர் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள காரைதீவு மற்றும் நாவிதன்வெளி ஆகிய பிரதேச சபைகளின் வரவு-செலவுத் திட்டங்களிற்கு எதிராக குறித்த பிரதேச சபைகளிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிராக வாக்களித்திருந்தமையே இதற்கு காரணம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இதற்கிடையில், கல்முனை மேயர் நிசாம் காரியப்பர் மற்றும் பிரதி மேயர் சிராஸ் மீராசாஹிப்பிற்கும் இடையிலான இழுபறி தொடர்ந்து காணப்படுகின்றது. கல்முனை மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22.12.13) இரவு இடம்பெற்றுள்ளது.
 
இந்த கூட்டத்தில் பிரதி மேயர் சிராஸ் மீராசாஹிப் உட்பட நான்கு உறுப்பினர்களின்  கலந்துகொள்ளவில்லை. இவர்கள் இந்த வரவு-செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக தகவல் கிடைக்கப்பட்டதை அடுத்தே, வரவு-செலவுத் திட்டம் பிரிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்வாறான நிலையில் மாநகர சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  பொதுச் செயலாளர் எம்.ரீ.ஹசன் அலி அக்கட்சியின் மாநகர சபை உறுப்பினர்களுக்கு குறுந்தகவல் மூலம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
ஹோமாகம பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டம் தோல்வி
 
ஐக்கிய மக்கள் சுதந்தி கூட்டமைப்பின் ஆட்சியதிகாரத்தின் கீழிருக்கின்ற
ஹோமாகம பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் இரண்டு வாக்குகளினால் தோல்வியடைந்துள்ளது. வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 10 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
 
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் சுனில் பெரும்புலி வாக்களிக்கவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திய கூட்டமைப்பின் எண்மரும் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரும் எதிராக வாக்களித்தனர்.
இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட போது இந்த சபைக்கான வரவு-செலவுத்திட்டம் தோல்வியடைந்தது. எனினும் ஒழுங்கு பிரச்சினை காரணமாக அந்த வாக்கெடுப்பு இரத்து செய்யப்பட்டது. 
 
நாவிதன்வெளி பிரதேச சபையின் வரவு-செலவுத் திட்டம் தோல்வி
 
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள நாவிதன்வெளி பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோல்வியடைந்துள்ளது.
பிரதேச சபை தவிசாளர் தலைவர் எஸ்.குணரட்னத்தினால் 2014ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இன்று திங்கட்கிழமை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
 
இந்த வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக நான்கு பேரும் ஆதரவாக மூன்று பேரும் வாக்களித்தனர். இதனால் பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் ஒரு  வாக்கினால் தோல்வியடைந்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் நான்கு உறுப்பினர்கள் இந்த வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர். 
 
எனினும், பிரதேச சபை தவிசாளர் உட்பட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மூன்று உறுப்பினர்கள் வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். 

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...