Saturday, December 14, 2013

மின்னேரிய பிரதேசத்தில் உள்ள 7 பீரங்கிப் படைப் பிரிவின் முகாமில் இன்று மதியம் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் ஒன்றில் ஒருவர் பலி !

14th of December 2013
மின்னேரிய பிரதேசத்தில் உள்ள 7 பீரங்கிப் படைப் பிரிவின் முகாமில் இன்று மதியம் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் ஒன்றில்  ஒருவர் பலி .
 
மின்னேரிய பிரதேசத்தில் உள்ள 7 பீரங்கிப் படைப் பிரிவின் முகாமில் இன்று மதியம் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 
இராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற்று வந்த பயிற்சி நிலை இராணுவ வீரரே சம்பவத்தில் உயரிழந்துள்ளார்.
 
சிலாபத்தை சேர்ந்த 21 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து சிலாபம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்டுள்ளார்!

14th of December 2013
சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
 
நயினாதீவு நாகவிகாரையில் நடைபெற்று பிரார்த்தனையில் அவர் கலந்துகொண்டுள்ளார்.
 
இன்று காலை 11.30 மணிக்கு யாழ்ப்பணத்திற்கு வருகைதந்த இவர் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெறும் மைலோ கிண்ண கால்ப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.
 
 

 

வடக்கு, கிழக்கில் காணாமல் போனோர் தொடர்பில் தகவல் வழங்க அச்சம் கொள்ள தேவையில்லை: மக்ஸ்வெல் பரணகம!

14th of December 2013
வடக்கு, கிழக்கில் காணாமல்போனவர்கள் தொடர்பாக ஆராய்ந்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு தகவல் வழங்குவதற்காக வடக்கு கிழக்கு மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அச்சுறுத்தல்களுக்கு இலக்காவதாக குறிப்பிட்டு வடக்கு, கிழக்கைச் சேர்ந்த மக்கள் காணாமற்போன தமது உறவினர்கள் குறித்த தகவல்களை வழக்க பின்னிற்பதாக காணாமல்போனவர்கள் தொடர்பாக ஆராய்ந்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழு தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை காணாமற்போனோர் தொடர்பில் முறைப்பாடுகளை வழங்குவதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கான காலம் கடந்த மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைவதாக இருந்தபோதும் பல நிறுவனங்களின் மூலமாக விடுக்கப்பட்ட கோரிக்கையின்படி ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த கால நீடிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் காலம் இம் மாதம் 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

மன்னார் மாந்தை பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை காலை இடம் பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாயி ஒருவர் மரணம்!

14th of December 2013
மன்னார் மாந்தை பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை காலை இடம் பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாயி ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

பெரிய மடுவில் இருந்து மன்னாருக்கு வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தும்,தள்ளாடி இராணுவ முகாமில் இருந்து மாந்தை வீதியூடாக சென்று கொண்டிருந்த இராணுவ கப் ரக வாகனமும் மோதியே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன் போது குறித்த கப் வாகனத்தின் சாரதியான இராணுவ சிப்பாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் குறித்த வாகனத்தில் இருந்த 2 இராணுவப வீரர்கள் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

கிழக்கில் இடம்பெற்ற காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் 10300 முறைப்பாடுகள்!

14th of December 2013
காணாமல் போதல்கள் தொடர்பில் 10300 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு கிழக்கில் இடம்பெற்ற காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இவ்வாறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
 
பொதுமக்களினால் 6000 முறைப்பாடுகுள் செய்யப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புத் தரப்பின் பெற்றோர் மற்றும் உறவினர்களினால் 4307 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
1990ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாட்டின் எந்தவொரு பிரதேசத்தைச் சேர்ந்தவரும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் நோக்கில் ஓய்வு பெற்ற நீதவான் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
 
இந்த ஆணைக்குழுவின் பதவிக் காலம் நவம்பர் மாதம் 30ம் திகதியுடன் நிறைவடைந்த போதிலும், பதவிக்காலத்தை டிசம்பர் மாதம் 31ம் திகதி வரையில் நீடிக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
 

ஹிக்கடுவையில் சுமார் 10 கிலோ ஹெரோயினுடன் மூவர் கைது!

14th of December 2013
ஹிக்கடுவையில் சுமார் 10 கிலோ ஹெரோயினுடன் மூவரை பொலிஸார் இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.

ஹிக்கடுவையிலுள்ள வீடொன்றிலிருந்தே இந்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வருகைதந்துள்ள லைபீரியா இனத்தைச்சேர்ந்த ஒருவருக்கு ஹெரோயின் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போதே இந்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெற்கிலிருந்து பாரியளவில் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

யாழ். போதனா வைத்தியசாலை தொண்டர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும்!

14th of December 2013
யாழ். போதனா வைத்தியசாலை தொண்டர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும்  தொடர்கின்றது.

யாழ். வைத்திய சாலையில் தொண்டர்களாக பணிபுரிவோர் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க கோரி நேற்றைய தினம் முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தினால் வைத்தியசாலை சேவைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நோயாளர் பராமரிப்பு மற்றும் நோயாளர்களை கொண்டு செல்லல் என்பது இவர்களின் போராட்டத்தினால் பாதிப்படைந்துள்ளது.

விடுதிகளில் பணிபுரியும் தாதியர்களும், சுகாதார சிற்றூழியர்களுமே நோயாளர்களை பரிசோதனைகளுக்காக கொண்டு செல்கின்றனர்.

அதற்கும் போதிய ஆள் வசதி இல்லாத காரணத்தால் நோயாளர்கள் சேவையில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன .

எமக்கு தீர்வு கிடைக்குவரை நாம் எமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் என தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.

எதிர்­வரும் காலங்­களி்ல் வாகன ஓட்டுநர்கள் தொடர்பில் கடுமையான சட்டங்கள்:சீ.பி.ரத்­னா­யக்க!

14th of December 2013
எதிர்­வரும் காலங்­களி்ல் வாகன ஓட்­டு­நர்கள் தொடர்பில் புதிய கடு­மை­யான சட்­டங்­களை அமுல்­ப­டுத்­தப்­போ­வ­தாக தெரி­வித்த தனியார் போக்­கு­வ­ரத்து துறை அமைச்சர் சீ.பி.ரத்­னா­யக்க மோட்டார் சைக்­கிள்­களில் தலைக்­க­வசம் இல்­லா­மலும், ஒரு கைப்­பி்­டியை மட்டும் பிடித்துக் கொண்டு மோட்டார் சைக்­கிளை செலுத்­துதல் மற்றும் தொலை­பே­சியி்ல் உரை­யாடிக் கொண்டு வாகனம் செலுத்­து­வோ­ருக்கு எதி­ரா­கவே கடும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வுள்­ள­தெ­னவும் அமைச்சர் சபையில் நேற்று தெரி­வித்தார்.
 
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற போக்­கு­வ­ரத்து அமைச்சு மீதான குழு நிலை விவா­தத்தில் உரை­யாற்றும் போதே அமைச்சர் ரத்­னா­யக்க இதனைத் தெரி­வித்்தார்.
 
சபையில் அமைச்சர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,
 
பாட­சாலை பஸ்­களில் ப­ய­ணிக்கும் பிள்­ளை­களின் பாது­காப்பை உறுதி செய்யும் வகையில் அப்­பிள்­ளை­களின் பெற்­றோ­ருக்கு குறுஞ்­செய்தி அனுப்பும் முறை­மை­யொன்றும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.
 
பஸ் சேவையை சிறப்­பான முறையில் நடத்­து­வ­தற்கு திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. பஸ்ஸில் சீ.சீ.டிவி மற்றும் ஜீ.பி.எஸ் பொருத்­தப்­ப­ட­வுள்­ளது. அத்­தோடு சார­திகள், நடத்­து­னர்­கள் பய­ணி­க­ளுக்கு சேவை­களை நல்ல முறையில் முன்­னெ­டுக்­கின்­றார்­களா என்­பதும் கண்­கா­ணிக்­கப்­ப­ட­வுள்­ளது.
 
விபத்­துக்­களை தவிர்ப்பதற்கான நட வடிக்கைகள் எடுக்கபடவுள்ளதோடு அனர்த்தங்களை ஏற்படுத்தும் சாரதிகளுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கப்ப டவுள்ளன என்றார்.

இலங்கையின் வடக்கில் அரேபிய புரட்சிக்கு நிகரான புரட்சியில் ஈடுபட கூட்டமைப்பு தயாராகி வருகிறது!

14th of December 2013
இலங்கையின் வடக்கில் அரேபிய புரட்சிக்கு நிகரான புரட்சி ஒன்றை முன்னெடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகி வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
 
ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாடு நடைபெறும் காலப்பகுதியான மார்ச் மாதத்தில் இந்த புரட்சி முன்னெடுக்கப்படவுள்ளது.
 
வடக்கில் உள்ள  புலிகளின் முன்னாள் போராளிகள் மற்றும் தமிழ் மக்களை இணைத்து கொண்டு குழப்பமான நிலைமையை ஏற்படுத்த கூட்டமைப்பு தயாராகி வருவதாக தெரியவருகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறியை அந்த பதவியில் இருந்து நீக்கி விட்டு, தமக்கு சாதகமாக தமிழ் சிவில் அதிகாரி ஒருவரை ஆளுநராக நியமித்து கொள்ள வேண்டும் என்பதே கூட்டமைப்பின் நோக்கம் என அந்த இணையத்தளம் கூறியுள்ளது.
 
இதனிடையே வடக்கு வான் பரப்பு இலங்கை விமானப்படையின் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் உலக தமிழர் பேரவையின் ஊடாக இந்த கோரிக்கை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது.

இந்தியன் ஒயில் நிறுவனத்திற்கு தொடர்பான உடன்படிக்கை குறைகள் உள்ளன: நியோமல் பெரேரா!

14th of December 2013
இந்தியன் ஒயில் நிறுவனத்திற்கு திருகோணமலையிலுள்ள எரிபொருள் தாங்கிகள் வழங்கப்பட்டமை தொடர்பான உடன்படிக்கை குறைப்பாடுகளை கொண்டது என பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
 

எண்ணெய் தாங்கிகள் மற்றும் சொத்துக்கள் திருகோணமலை அரசாங்க அதிபரின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.
எனினும் இந்த எண்ணெய் தாங்கிகளை இந்தியன் ஒயில் நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கைச்சாத்திட்டுள்ளது.
இந்திய - இலங்கை உடன்படிக்கையின் ஒரு பகுதியாக 2002 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்க தீர்மானித்தது என்றார்.
 
 
 
 
 

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக பாரிய நடவடிக்கை ஆரம்பம்: விமல் வீரவன்ஸ!

14th of December 2013
ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டில் இலங்கையை கடும் அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் பாரிய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் அமைச்சர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
ஜெர்மனியில் அண்மையில் மக்களின் நிரந்தர தீர்ப்பாயம் என்ற தீர்ப்பாயத்தில் இலங்கைக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதில் 2009 ஆம் ஆண்டில் இலங்கையில் மிகப்பெரிய மனித படுகொலை நடந்துள்ளதாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
ஜெனிவாவில் மார்ச் மாதம் நடைபெறும் மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டில் இலங்கையை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் நோக்கிலேயே இவ்வாறு பிரிவினைவாத மற்றும் புலிப் பயங்கரவாதத்திற்கு ஆதரவான தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.

அரசியல் கைதிகளுக்கிடையிலும் குற்றமிழைத்தவர்கள் உள்ளனர் கைதிகளை உடன் விடுவிப்பது சாத்தியமற்றது: வாசுதேவ நாணயக்கார!


14th of December 2013
அரசியல் கைதிகளுக்கிடையிலும்; குற்றமிழைத்தவர்கள் உள்ளனர். எனவே அவர்களை  உடனடியாக விடுதலை செய்வதென்பது முடியாதது. எனவே, இவர்கள் சரியாக இனங்காணப்பட்டதன் பின்னரே இது குறித்து தீர்மானங்களை எடுக்க முடியும் என  மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அரசு அமுல்படுத்த வேண்டும் என கடந்த  புதன்கிழமை   ஊடகவியலாளர் சந்திப்பின்போது வலியுறுத்தியிருந்தார்.  இதற்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் தொடர்பில் என்னால் எதுவும் கூறமுடியாது. ஆனால், ஆண்டகை கூறியிருப்பதை நாமும் அறிவோம். அவர் கூறியிருப்பதில் உள்ள ஒரு பிரச்சினை என்னவெனில் அரசியல் கைதிகள், சாதாரண கைதிகள் என யாரும் இதுவரையிலும் அரசினால் அடையாளம் காணப்படவில்லை.

தற்போது  புலிகளின் உறுப்பினர்களையே அரசியல் கைதிகளாகக் கூறப்படுகின்றது. ஆனால், அது இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. அவர்களுக்குள்ளும் குற்றமிழைத்தவர்கள் உள்ளனர். இந்த நிலையில் இவர்களைக் கைது செய்தமை அரசியல் பழிவாங்கல் என எவ்வாறு கூறுவது? இவர்கள் குறித்து ஆராயப்பட்ட பின்னரே எந்தத் தீர்மானத்தையும் எடுக்க முடியும்.

ஆனால், அதேவேளை குற்றங்கள் செய்தமைக்கு ஆதாரங்களின்றி சிறையில் கைதிகள் இருப்பார்களாயின் அவர்களை உடனே விடுதலை செய்ய முன்வர வேண்டும். அவ்வாறு அல்லாவிடின் அவர்கள் மீது வழக்காவது தொடர வேண்டும்.  இவ்வாறு ஒன்றுமில்லாது சிறையில் அவர்களை அடைத்து வைத்திருப்பது எம்மைப் பொறுத்தமட்டில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். ஆகவே இதுவிடயத்தில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என்றார்  வாசுதேவ நாணயக்கார.

Friday, December 13, 2013

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 24 ஓட்டங்களால் வெற்றி!

14th of December 2013
பாகிஸ்தானுக்கு எதிரான 2வது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 24 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

நேற்றி இரவு துபாயில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்புடன் களமிறங்கிய இலங்கையின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான டில்ஷான் (48) மற்றும் குசல் பெரேரா (84) ஆகியேர் சிறந்த தொடக்கத்தை பெற்றுக் கொடுத்தனர்.

மேலும் சங்கக்கார ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களை விளாச, இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து 211 ஓட்டங்களைக் குவித்தது.

தொடர்ந்து 212 என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 187 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இதன்மூலம் 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றியைத் தழுவியது. போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருதை குசல் பெரேராவும் தொடரின் சிறப்பாட்டக்காரர் விருதை ஷகிட் அப்ரிடியும் வென்றனர்.

இதன்படி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 தொடர் 1-1 என சமப்படுத்தப்பட்டுள்ளது. 

வெளிநாட்டு நிதியைப் பெற்றுக் கொள்ளும் வட மாகாணசபையின் முயற்சி தோல்வி!

14th of December 2013
வெளிநாட்டு நிதியைப் பெற்றுக் கொள்ளும் வட மாகாணசபையின் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
வெளிநாடுகளிலிருந்து நேரடியாக நிதியைப் பெற்றுக்கொள்ள வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் முயற்சித்து வருவதாகவும் எனினும் இந்த முயற்சிக்கு அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது எனவும்  பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மாகாணசபைகள் நேரடியாக வெளிநாடுகளிடமிருந்து நிதி பெற்றுக் கொள்ள மேற்கொள்ளும் முயற்சியானது மத்திய வங்கியின் சட்டங்களுக்கு புறம்பானது.
 
மத்திய வங்கியின் அனுமதியின்றி வெளிநாட்டு நிதி உதவிகளை மாகாணசபைகளினால் பெற்றுக்கொள்ள முடியாது எனவும் அப்பத்திரிகையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேசிய கீதம் திருத்தம் செய்யப்படுதல் மற்றும் போரின் போது உயிரிழந்த புலி உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்க முடியாது: கோதபாய ராஜபக்ச!

14th of December 2013
தேசிய கீதம் திருத்தம் செய்யப்படுதல் மற்றும் போரின் போது உயிரிழந்த புலி உறுப்பினர்களுக்கு நட்டஈடு வழங்குதல் போன்ற கோரிக்கைகளை ஏற்க முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றினால் இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் 500க்கும் மேற்பட்ட பரிந்துரைகளையும் அமுல்படுத்த முடியாது.
 
ஏற்கனவே ஆணைக்குழுவின் 100க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
வடக்கு கிழக்கு இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டுமென கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படக் கூடியவாறான பரிந்துரைகளை அமுல்படுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளி­நொச்சி–அறி­வியல் நகர் வீதிகள் நக­ர­ம­ய­மாக்கல் திட்டத்தில் புன­ர­மைப்பு!

14th of December 2013
யாழ் . பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி விவசாய , பொறியியல் பீடங்கள் அமைக்கப்படவுள்ள பிரதேசங்களில் நகரமயமாக்கல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது . நகரமயமாக்கல் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட 4 பல்கலைக்கழகங்களில் இந்த திட்டம் இந்த திட்டத்தின் கீழ் கிளிநொச்சியின் ' அறிவியல் நகர் ' என்ற பிரதேசத்திலே பல முக்கிய வீதிகள் நிர்மாணிக்கப்படவிருக்கின்றன .
 
முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி டிப்போ வரையான கிட்டத்தட்ட 9.5 கிலோமீற்றர் வீதி டுப்ளிகேசன் வீதி 465 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளது . இதேபோல முறிகண்டி , அக்கராயன்குளம் , ஸ்கந்தபுரம் ஊடாக கிளிநொச்சி கனகபுரம் மற்றும் டிப்போ சந்தி , வில்சன் வீதி , இரணைமடு வீதி ஊடான சுற்றுவட்டமாகச் செல்லும் 17 கிலோமீற்றர் வீதி 580 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவிருக்கின்றது என கல்வி உயர்கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கான குழுநிலை விவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கும்போது , கிளிநொச்சி நகரிலு
 
ள்ள பல்வேறு இணைப்பு வீதிகளும் புனரமைக்கப்படவிருக்கின்றன . அத்தோடு , பல்கலைக்கழகத்திற்கு அருகாமையிலுள்ள பாரதி வித்தியாலயம் , சிவபாத கலையகம் , விவேகானந்தா வித்தியாலயம் போன்ற பாடசாலைகள் அதிநவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்படவிருக்கின்றன . அந்த வளாகத்தைச் சுற்றிய பிரதேசங்களில் உட்கட்டுமானங்கள் மற்றும் வங்கிகள் , சுப்பர் மார்க்கெட் போன்ற அடிப்படை வசதிகளையும் உருவாக்குவதற்கும் கௌரவ அமைச்சர் முன்மொழிவுகளை செய்திருக்கிறார் .

தனியான தமிழ் பிரதேச செயலகம் ஒன்றை அமைக்கும் கூட்டமைப்பின் முயற்சி தோல்வி!

14th of December 2013
தனியான தமிழ் பிரதேச செயலகம் ஒன்றை அமைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சி தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கல்முனையில் தமிழ் மக்களுக்கு என தனியான பிரதேச செயலகம் ஒன்றை அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சித்துள்ளது.
கல்முனை பிரதேச செயலகத்திற்கு மேலதிகமாக, உப பிரதேச செயலகமொன்று இயங்கி வருகின்றது.
 
இந்த உப பிரதேச செயலகத்தை தமிழ் பிரதேச செயலகமாக மாற்றுவதற்கு கூட்டமைப்பு முயற்சித்துள்ளது. எனினும், இந்த முயற்சிக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
 
இன அடிப்படையில் பிரதேச செயலகங்களை நிறுவுவது ஏற்றுக்கொள்ள
முடியாது என அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஹக்கீமின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து புதிதாக பிரதேச செயலகம் அமைப்பது குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளது.
 
பொதுநிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன தலைமையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

தொப்பியோ, பர்தாவோ அனிந்து ஆள் அடையாள அட்டை வழங்கப்படமாட்டாது: ஆர்.எம்.எஸ்.சரத்குமார !

14th of December 2013
ஆட்பதிவு திணைக்களத்தினால் அடுத்தவருடம் புதிதாக வழங்கப்படவுள்ள தேசிய அடையாள அட்டையில் முஸ்லிம்களுடைய கலாசாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் தொப்பியோ பர்தாவோ அனிந்து ஆள் அடையாள அட்டை வழங்கப்படமாட்டாது என ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு கல்லடி ஒசானிக் சுற்றுலாவிடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவரினால் கேட்கப்பட்டகேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
2014 ஜுன் மாதத்தின் பின்னர் புதிதாக வழங்கப்படவுள்ள இலத்திரணியல் ஆள் அடையாள அட்டை இலங்கை முழுவதும் வாழும் மக்களுக்கு ஒரே விதமானதாகவும், கலர் புகைப்படத்துடன் சிங்களம், தமிழ் மொழிகளை மாத்திரம் கொண்டு அவை அமைந்திருக்கும் எனவும், எந்தவொரு இன கலாசாரத்தினையும் பிரதிபலிக்கக்கூடிய வகையில் அவை அமைந்திருக்காது எனவும் அவர் தெரிவித்தார்.
 
இலங்கையில் வாழும் இந்திய சீன பிரஜைகளுக்கு 2008ம் ஆண்டு முதல் இலங்கை பிரஜைகள் அந்தஸ்த்து வழங்கப்பட்டு அவர்களுக்கும் ஆள் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் 9வது ஆள் அடையாள அட்டை இடம்பெயர் சேவை மூலம் 6456 நபர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதுடன் வடக்கு மாகாணத்தில் 69769 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 54603 நபர்பகளுக்கும், கிழக்கு மாகாணத்தில் 61477 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்று பழைய விண்ணப்பங்களுடன் சேர்த்து 63443 நபர்களுக்கு ஆள் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
இந்நிகழ்வில் கபே நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஏ.எச்.ஏ.
ஹுஸைன், ஆட்பதிவுத் திணைக்களத்தின் அதிகாரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வவுனியா வடக்கில் மத்தியஸ்தசபை உருவாக்கம்!

14th of December 2013
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முதன் முறையாக மத்தியஸ்தசபை அங்கத்தவர்களுக்கு நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
 
20 கிராம சேவகர் பிரிவை உள்ளடக்கிய வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் 15 அங்கத்தவர்களை உள்ளடக்கி மத்தியஸ்தசபை உருவாக்கப்பட்டுள்ளது.
 
வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க. பரந்தாமன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் உத்தியாகபூர்வமாக மத்தியஸ்தசபையின் செயற்பாடுகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
இந் நிகழ்விற்கு கனகராயன்குளம், புளியங்குளம், நெடுங்கேணி பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் வங்கிகளின் முகாமையாளர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டடிருந்தனர்.

முஸ்லிம் மக்களை உதாரணமாக வைத்து எதிர் காலத்தில் பட்டிருப்பத் தொகுதி மக்கள் செயற்பட வேண்டும்: சாணக்கியன் இராசமாணிக்கம்!

14th of December 2013
இலங்கையிலே தனித் தமிழ் தேர்தல் தொகுதியாகக் காணப்படுவது மட்டக்களப்பிலே அமைந்துள்ள பட்டிருப்பு தேர்தல் தொகுதிதான் , தற்போத பார்த்தால் முஸ்லிம் பிரதேசங்கள் அபிவிருத்தி கண்டு வருகின்றன எனவே முஸ்லிம் மக்களை உதாரணமாக வைத்துக் கொண்டு எதிர் காலத்தில் நமது மக்கள் குறிப்பாக பட்டிருப்பத் தொகுதி மக்கள் செயற்பட வேண்டும்.
என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பட்டிருப்பு தேர்தல் தொகுதியின்
அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
களுவாஞ்குடி பிரதேசத்தின் மகிளுர் கிராமத்தில் நடைபெற்ற ஒளி விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேதான் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மகிளுர் சிறுவர் சமுக அபிவிருத்தி அமைப்பின் திட்ட முகாமையாளர் அ.சௌந்தராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையிலேதான் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்குகையில் இந்த இடத்தில் கூடியிருக்கும் மாணவர்களைப்போலும் , அவர்களின் கலை நிகழ்வகளைப்போலும் , நான் வேறு எங்கும் காணவில்லை இவ்வாறு திறமையான மாணவர்கள் கொண்ட இந்த பட்டிருப்புத் தொகுதியில் எந்த விதமாக அபிவிருத்திகளும் இதுவரையில் நடைபெறவில்லை என்பதனையிட்டு மிகவும் கவலையாகவுள்ளது.
 
இவைகளெல்லாவற்றினையும் நோக்கிவிட்டுதான் நான் பல இதிட்டங்களை பட்டிருப்பு தொகுதி மக்களின் எதிர்கால நனமை கருதி முன்வைக்கவுள்ளேன். விளையாட்டு, கல்வி, சுகாதாரம், தொழில் வாய்ப்பு, வீடமைப்பு , விவசாயம், போன்ற பல திட்டங்களை இத்தொகுதியில் அமுல்ப் படுத்தவுள்ளேன்.
எனக்கு இப்போதுதான் 23 வயது எனவே இப்பகுதி மாணவர்களின்தும், சிறார்களினதும் , இளைஞர் யுவதிகளினதும், எனைய மக்களினதும், தேவைகள் என்ன என்பதனை எனக்கு யாரும் சொல்லி அறிய வேண்டியதில்லை எனவே மக்களுக்கான சேவைகளை எனது பல திட்டங்களுடாக பல அபிவிருத்திகளை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளேன்.
 
எதிர் காலத்தில எமது சிறுர்களுக்கு ஆங்கிலம் கற்பித்து அதில் பாண்டிதியம் பெற்றவர்களாக நாங்கள் அவர்களை மாற்ற வேண்டும். இவற்றுக்கு நான் எனது திட்டங்களுடாக பல அபிவிருத்திகளை மேற்கொள்வதற்குத் தயாராக இருக்கின்றேன்.
 
நான் எனது கல்வியினை ஆங்கில மொழியிலேதான் கற்றேன். அந்த வகையில் மாணவர்களின் நலன் கருதி இலவசமாக ஆங்கிலம் கற்பிக்கவும் திட்டமிட்டுள்ளேன். இதற்கு நான் இராசமாணிக்கம் பவுண்டேஷனூடாக உதவிகளை மேற்கொள்ளவுள்ளேன்.
 
பட்டிருப்புத் தொகுதியில் உள்ள பெண்களின் அபிவிருத்தியினை உயர்த்துவதற்காக விசேடமான திட்டம் ஒன்றினை முன்வைக்கவுள்ளேன். அதற்கா வேண்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சமர்ப்பித்துள்ள வரவு செலவுத் திட்டத்தில் பெண்களின் சுய தொழில்களுக்கு வட்டியில்லாத கடன் களை வழங்குவதாக சொல்லப் பட்டுள்ளது. அதனை நான் உங்களுக்கு பெற்றுத்தருவேன். இதன்மூலம் பெண்கள் வாழ்வாதார ரீதியில் முன்னேற்றமடைய சிறந்த சந்தர்ப்பமாக அமையும்.
 
இலங்கையிலே தனித் தமிழ் தேர்தல் தொகுதியாகக் காணப்படுவது மட்டக்களப்பிலே அமைந்துள்ள பட்டிருப்பு தேர்தல் தொகுதிதான் , முஸ்லிம் பிரதேசங்கள் அபிவிருத்தி கண்டு வருகின்றன எனவே முஸ்லிம் மக்களை உதாரணமாக வைத்துக் கொண்டு எதிர் காலத்தில் நாம் அனைவரும் செயற்பட வேண்டும்.
 
என்னுடைய காரியாலயம் பெரியபோரதீவு சந்தியில் அமையப் பெற்றுள்ளது. அடுத்த மாதத்திலிருந்து வாரநாட்களில் திறந்திருக்கும் அதில் நேரடியாக வந்து மக்கள் தமது குறை நிறைகளை என்னிடம் எடுத்தியம்பலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுக்கும் இடம்பெயர் சேவை!

14th of December 2013
கிழக்கு மாகாணத்தில் தேசிய ஆள் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுக்கும் இடம்பெயர் சேவை நேற்று முன்தினம் நேற்று வியாழக்கிழமை.மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுது.
கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் கே. தனபாலசுந்தரம். உதவிப் பிரதேச செயலாளர் தயாவதி கௌரீஸ்வரன், கபே நிறுவனத்தின் மாகாண இணைப்பாளர் ஏ.எச்.ஏ. ஹுஸைன் ஆட்பதிவுத் திணைக்களத்தின் அமுல்படுத்தும் அதிகாரிகளான எச்.எம்.பி. ஹேரத், எம்.ஜே.எம். அமீர் தலைமையிலான அதிகாரிகள், ஏறாவூர் மற்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய அதிகாரிகள், கிராம சேவை அலுவலர்கள் உள்ளிட்டோரும் இன்னும் பல அதிகாரிகளும் இந்த இடம்பெயர் சேவையை ஆரம்பித்து வைத்துள்ளனர்.
 
இந்த இடம்பெயர் சேவைக்கு யூ.எஸ்.எய்ட் நிறுவனம் நிதி அனுசரணை வழங்கியிருக்கின்றது. மனித உரிமைகள் ஆய்வு நிலையம் மற்றும் கபே நிறுவனம் என்பன ஆளடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுக்கும் இடம்பெயர் சேவையை நடத்தி வருகின்றன.
இடம்பெயர் படப்பிடிப்பு சேவையும் முத்திரைக் கட்டணங்களும் மேற்படி நிறுவனங்களினால் இலவசமாக வழங்கப்படுகின்றன.
 
ஆளடையாள அட்டை இடம்பெயர் சேவையில் பிறப்புப் பதிவு, திருமணப் பதிவு மற்றும் அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்குத் தேவையான இன்னோரன்ன ஆவணங்களும் இலவசமாக பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.
கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 18 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 700 பேர் இன்றைய இடம்பெயர் சேவையில் இவலச சேவைகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர் என்று கபே நிறுவனத்தின் மாகாண இணைப்பாளர் ஏ.எச்.ஏ. ஹுஸைன் தெரிவித்தார்.

செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. சாகும் வரை உண்ணாவிரதம்: சிறிதரன் எம்.பி தற்கொலை செய்யவும் தயாராக உள்ளாராம்: பியான பியசேன!

14th of December 2013
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகின்றார்.
 
அடுத்தவர் சிறிதரன் எம்.பி தற்கொலை செய்யவும் தயாராக உள்ளாராம். இவர்கள் உடனடியாக இதனை செய்ய வேண்டும். அதன் பின்னராவது தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கட்டும். நான் இவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்பேன். இவர்கள் தமிழ் மக்களின் மனங்களில் உள்ள காயங்களை குணப்படுத்த வேண்டும். ஆனால் அதனைச் செய்யாது காயங்களை பாதுகாத்து வருகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து அரசாங்கத் தரப்பிற்கு தாவிய அம்பாறை மாவட்ட எம்.பியான பியசேன இன்று சபையில் தெரிவித்தார்.
 
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சின் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய பியசேன எம்.பி மேலும் கூறுகையில்,
தமிழ் தேசிய கூட்டமைப்பை தடை செய்து அதன் உறுப்பினர்கள் அனைவரையும் கைது செய்யவேண்டும்.
 
இராமாயணத்திற்கு ஒரு கூனி, மகாபாரதத்திற்கு ஒரு சகுணி அதே போன்று தமிழ் மக்களுக்கு ஒரு தமிழ் தேசியக் கூட்டமைப்பு, உலகில் கொடிகட்டிப் பிறந்த இனம் தமிழினம். ஆனால் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரால்
தமிழினம் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றன.
 
அதில் உள்ள செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகின்றார். அடுத்தவர் ஸ்ரீதரன் எம்.பி தற்கொலை செய்யவும் தயாராக உள்ளாராம்.
 
இவர்கள் உடனடியாக இதனை செய்ய வேண்டும். அதன் பின்னராவது தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கட்டும். நான் இவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்பேன். இவர்கள் தமிழ் மக்களின் மனங்களில் உள்ள காயங்களை குணப்படுத்த வேண்டும். ஆனால் அதனைச் செய்யாது காயங்களை பாதுகாத்து வருகின்றனர்.
 
இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிற்கு சென்றும் நடிக்கிறது இங்கேயும் நடிக்கின்றது. கச்சதீவு என்பது பாம்பு கழற்றிய செட்டை போன்றது. பாம்பு தான் கழற்றிய செட்டையை ஒரு போதும் திரும்ப போட்டுக் கொள்ளாது. அதே போன்று கச்சத்தீவை ஒரு போதும் இந்தியா திரும்பபெற முடியாது.
 
எமது நாட்டை இராவணன் என்ற மன்னன் ஆண்டான். தற்போது மகிந்த என்ற மன்னன் சிறப்பாக ஆட்சி செய்கின்றார். இதை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பொறுக்க முடியவில்லை. இதனால் தான் சதி வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
எனவே உடனடியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை தடைசெய்வதுடன் அதில் உள்ள உறுப்பினர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றார்.

உள்நாட்டு யுத்தத்தினால் உயிரிழந்த, காயமடைந்த நபர்கள் மற்றும் சொத்துக்கள் சேதங்கள் தொடர்பான தொகை மதிப்பு!

14th of December 2013
இலங்கையில் ஒவ்வொரு 10 வருடத்துக்கும் ஒரு தடைவை குடிசன, வீட்டுவதிகள் தொகை மதிப்பு நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த ஒக்டோபர் 20திகதி தொடக்கம் நவம்பர் 14ஆம் திகதி வரை பொருளாதார வசதிகள் மதிப்பீடுகள் செய்யப்பட்டன.
 
அது  போன்று இலங்கையில் முதல் தடவையாக உள்நாட்டு யுத்தத்தினால் உயிரிழந்த, காயமடைந்த நபர்கள் மற்றும் சொத்துக்கள் சேதங்கள் தொடர்பான  தொகை மதிப்பு இலங்கையின்; அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் நவம்பர் 30ஆம் திகதி முதல் டிசம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறும் என கல்முனை பிரதேச செயலக புள்ளி விபர உத்தியோகத்தர் எம்.பீ.எம்.சித்தீக் தெரிவித்தார்.

இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு உதவிகளை வழங்கத் தயார்: தென் ஆபிரிக்கா!

 14th of December 2013
இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு உதவிகளை வழங்கத் தயார் என தென் ஆபிரிக்கா அறிவித்துள்ளது. இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்க விரும்புவதாக இலங்கைக்கான தென் ஆபிரிக்க உயர்ஸ்தானிகர் ஜிவ் டொயிட்ஜ் தெரிவித்துள்ளார். நல்லிணக்க முனைப்புக்களில் பெற்றுக் கொண்ட அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்துகொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் நோக்கில் பாராளுமன்றக் கட்டிடத்தில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட தென் ஆபிரிக்க உயர்ஸ்தானிகர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற ஜனநாயக முறைமையை நிலைநாட்டுவதில் அமரர் நெல்சன் மண்டேலா அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மண்டேலாவின் மறைவு தென் ஆபிரிக்காவிற்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகிற்குமே இழப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எங்கள் காலத்தின் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவர் மண்டேலா என அவர் தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்துமாறு கோரி ஐரோப்பிய பாராளுமன்றில் தீர்மானம்!

14th of December 2013
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு கோரி ஐரோப்பிய பாராளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முழு அளவில் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய பாராளுமன்றம் அறிவித்துள்ளது. வடக்கில் மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட்டமை மற்றும் சமாதானத்தை நிலைநாட்டியமை வரவேற்கப்பட வேண்டியது என ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் யுத்தம் இடம்பெற்ற வலயங்களில் தற்போதைய நிலைமைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடக்குமுறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

யுத்த வலயத்தில் இராணுவத்தினரின் பிரசன்னம் கவனிக்கப்பட வேண்டியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தங்களது சொந்தங்களுக்கு என்னவாயிற்று என்பதனை அறிந்து கொள்ள இலங்கை மக்களுக்கு உரிமை இருப்பதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் பில் பென்னியன் தெரிவித்துள்ளார். இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

நம்பகமான விசாரணைகள், இராணுவத்தினரை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பரிந்துரைகள் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவற்றை முழுமையாக அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஐரோப்பிய பாராளுமன்றம் தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

மன்னாரில் கைது செய்யப்பட்ட மூவரும் மேலும் 14 நாட்கள் பயங்கரவாத தடுப்புப்பிரிவில்!

14th of December 2013
மன்னாரில் கைது செய்யப்பட்ட மூவரையும் தொடர்ந்து 14 நாட்கள் வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவில் வைத்து விசாரிக்க உத்தரவு.

மன்னார் முருங்கன் பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் திகதி  கைது செய்யப்பட்ட 3 பேரையும் தொடர்ந்து 14 நாற்களுக்கு   வவுனியா பயங்கரவாத தடுப்புப் பொலிஸில் பிரிவில் தடுத்து வைத்து விசாரனைகளை மேற்கொள்ள மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பல்டானோ இன்று வெள்ளிக்கிழமை   உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் முருங்கன் பகுதியில் உள்ள வீதி மதில்களில்   கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி  புலிகளின் மாவீரர் தினம் என எழுதிக்கொண்டிருந்ததாக சந்தேகத்தின் பேரில்  அப்பிரதேசத்தைச் சேர்ந்த மூவரை இராணுவத்தினர் கைது செய்து முருங்கன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இவர்கள் முருங்கன் பொலிஸாரினால் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக இவர்கள் தொடர்ந்தும் வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவில் தடுத்து வைத்து விசாரனைகள்; மேற்கொள்;ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில் குறித்த மூவரையும் இன்று வெள்ளிக்கிழமை வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸார் மன்னார் நீதிமன்றதத்தில் பதில் நீதவான் இ. கயஸ் பல்டானோ முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.  குறித்த சந்தேக நபர்களை தொடர்ந்தும் விசாரனைகள் செய்ய வேண்டும் எனக் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் குறித்த சந்தேக நபர்களை தொடர்ந்தும் 14 நாற்கள் விசாரனைகளை மேற்கொள்ள வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸாருக்கு அனுமதி வழங்கியதோடு குறித்த மூவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி மீண்டும் மன்றில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

Wednesday, December 11, 2013

பாகிஸ்தான் கடற் படை தளபதி அட்மிரல் முகம்மட் அசிப் சந்தில, நாளை இலங்கை வருகை!

11th of December 2013
பாகிஸ்தான் கடற் படை தளபதி அட்மிரல் முகம்மட் அசிப் சந்தில, நாளை வியாழக்கிழமை இலங்கை வரவுள்ளார்.

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த கொலம்பகேயின் அழைப்பை ஏற்று நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வருகின்றார்.

இந்த விஜயத்தின்போது பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த கொலம்பகே உள்ளிட்ட பலரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
 

கொழும்பில் தங்குமிடவசதியை தேடிக்கொடுத்த புலிகள் இயக்க உறுப்பினருக்கு கடூழிய சிறை!

11th of December 2013
புலிகள் இயக்கத்தின் தலைவர் ஒருவருக்கு கொழும்பில் தங்குமிடவசதியை தேடிக்கொடுத்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஒருவரை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு ஒருவருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியான பிரித் பத்மன் சுரசேன என்பவரே இவ்வாறு நேற்று செவ்வாய்க்கிழமை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

புலிகள் இயக்கத்தலைவர் ஒருவருடன் இணைந்து கொழும்பில் பயங்கரவாத செயலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாக விடுதலைப்புலிகளின் இயக்க உறுப்பினர் என்று கூறப்படும் மகேஷ் கிறிஸ்தோபர் விஜேந்திரன் என்பருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

அவரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றமே மேற்கண்டவாறு தீர்ப்பளித்தது. அவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றங்கள் வாசித்து காட்டப்பட்டன. குற்றப்பத்திரிகையிலிருந்த அந்த குற்றங்களை அவர் ஏற்றுக்கொண்டதையடுத்தே அவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டது.

இம்மாத இறுதியில் இலங்கை - இந்திய மீனவர்கள் கூட்டம்!

11th of December 2013
தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பல மாதங்களாக தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததை அடுத்து மத்திய அரசாங்கம் ஒருமாதிரியாக செயற்படத் தொடங்கியதால் இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையிலான கூட்டம் இந்த மாதம் முடிவில் நடைபெறவுள்ளது.

இரண்டு நாட்டு மீனவர்களும்; சந்திப்புக்கான திகதியை தீர்மானிப்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சும் தமிழ்நாட்டு அரசாங்கமும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு கிடைத்த செய்திகள் தெரிவித்தன.

இலங்கை மற்றும் இந்தியச் சிறைகளில் மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தப் பிரச்சினைபற்றி தமிழ்நாட்டு அரசாங்கத்திடமிருந்து அதன் கருத்தை எதிர்பார்த்திருப்பதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சுஜாதா சிங் பொதுநலவாய மாநாட்டுக்காக இலங்கை வந்திருந்தபோது தெரிவித்தார். இந்தச் சந்திப்பு இருதரப்பு  மீனவர்களின்; வாழ்வாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காண அவசியமானதெனவும் அவர் கூறினார்.

இலங்கையில் 88 இந்திய மீனவர்களும் இந்தியாவில் 120 இலங்கை மீனவர்களும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்

அமைச்சர்களுக்கு இடையிலான முரண்பாடுகளே இனப்பிரச்சினைக்கான காரணம்: ஸ்ரீரங்கா!

11th of December 2013
அமைச்சர்களுக்கு இடையிலான முரண்பாடுகளே இன்பிரச்சினைக்கான காரணம் என பிரஜைகள் முன்னணியின் பொதுச் செயலாளர் ஜே.ஸ்ரீரங்கா தெரிவித்துள்ளார்.
 
அமைச்சர்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமையே பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக்காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடாத்துவதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு இலகுவில் தீர்வு காண முடியும் என அவர் தெரிவித்துள்ளார். பல்வேறு துறைகளுக்கும் அமைச்சர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

காணிக்கென தனியான அமைச்சு காணப்படுகின்றது எனவும் சிலர் அமைச்சர்கள் தாமே அனைத்து விடயங்களுக்கும் பொறுப்பானவர்கள் எனக் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் லாபம் ஈட்டும் முனைப்புக்கள் நிறுத்தப்பட வேண்டுமென அவா வலியுறுத்தியுள்ளர்.

நுவரெலியா பிரதேச மக்கள் மின்சாரக் கட்டத்தைக் கூட செலுத்த முடியாத நிலையில் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். நுவரெலியா மக்களுக்கு அரசாங்கம் காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜே.ஸ்ரீரங்கா தெரிவித்துள்ளார்.

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...