Saturday, December 21, 2013

வெளிநாட்டில் தீர்வு தேடாதீர்கள். பேசுவோம் வாருங்கள் கூட்டமைப்பிற்கு அழைப்பு!

21st of December 2013
இலங்கையின் பிரச்சனைக்கு வேறு நாடுகளிடம் தீர்வு தேடுவதற்குப் பதிலாக , வெளிநாடுகளுக்கும்
முன்னுதாரணமாக விளங்கக்கூடிய விதத்திலான உள்ளூர் தீர்வுத் திட்டத்தை எட்டுவதற்காக தம்மோடு இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார் .
 
2014 - ம் ஆண்டின் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றியபோதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தக் கோரிக்கையை முன்வைத்தார் .
 
இலங்கையை எண்ணி இலங்கையே பெருமைப்படும் தீர்வுத் திட்டத்தை எட்ட உதவுமாறும் மகிந்த ராஜபக்ஷ இதன்போது கேட்டுக்கொண்டார் .
 
' மாகாணசபை நிர்வாகம் இல்லாதிருந்த வடக்கு மாகாணத்திலும் மாகாணசபை ஒன்றை நிறுவி , பொருளாதார அபிவிருத்தியிலும் ஜனநாயகத்திலும் எமது நாடு முக்கிய தருணத்தை எட்டியிருக்கின்ற சூழ்நிலையில் இந்த வரவுசெலவுத் திட்ட விவாதம் நடக்கிறது ' என்றார் மகிந்த ராஜபக்ஷ .
 
ஆளுங்கட்சிக்கும் தமிழ்க் கூட்டமைப்புக்கும் இடையிலான இனப்பிரச்சனை தீர்வு பற்றிய பேச்சுவார்த்தைகள் நீண்டகாலமாக முடங்கிக் கிடக்கின்றன
 
வடக்கு மாகாணசபையில் அரச சேவைகளை பலப்படுத்தவும் மும்மொழி செயற்திட்டத்தை விரிவுபடுத்தவும் வீட்டு வசதிகளையும் வாழ்வாதாரங்களையும் அபிவிருத்தி செய்வதற்காகவும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது கூறினார் .
 
' நான் தலைவர் ஆர் . சம்பந்தனிடமும் இந்த நாடாளுமன்றத்திடமும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாணசபையிடமும் நல்லிணக்கத்துக்காகவும் சமாதானத்துக்காகவும் அபிவிருத்திக்காகவும் எமது நாட்டுக்கே உரித்தான வகையில் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக எம்மோடு இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன் ' என்றார் இலங்கை ஜனாதிபதி .
 
இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கத்திற்கும் இடையில் நடந்துவந்த இனப்பிரச்சனை தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நீண்டகாலமாக முடங்கிக் கிடக்கின்றன .
 
இடையில் இனப்பிரச்சனை தீர்வு பற்றி ஆராய்வதற்காக அரசாங்கம் அமைத்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கம் அழைப்பு விடுத்துவருகிறது .
 
ஆனால் , அப்படியான நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலமான பேச்சுவார்த்தைகள் மூலம் நம்பகமான தீர்வுத்திட்டம் கிடைக்கவாய்ப்பில்லை என்று கடந்த கால அனுபவங்களை சுட்டிக்காட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்தக் குழுவில் இடம்பெற மறுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது .

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...