Tuesday, January 7, 2014

இலங்கை வந்துள்ள ஸ்டீபன் ஜே. ராப், நேற்று இரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கொழும்பில் சந்திப்பு!

Wednesday,8th of January 2014
இலங்கையின் தற்போதைய நிலைமைகளை ஆராய்வதற்காக உத்தியோகபூர்வப் பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஸ்டீபன் ஜே. ராப், நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைக் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை இரவு நேர உணவுடன் இருமணி நேரம் அவர் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்றிரவு தெரிவித்தவை வருமாறு:-
வடக்கு, கிழக்கின் தற்போதைய நிலைமை குறித்தும், தமிழ் மக்கள் எதிர்நோக்கிய, எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பிலும் சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸடீபன் ராப் எம்மிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.
கடந்த 2012, 2013 ஆம் ஆண்டுகளில் இரு தடவைகள் இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் உலக நாடுகளின் பேராதரவுடன் அமெரிக்காவால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இலங்கை அரசு நிறைவேற்றாமல் உள்ளது என்று அவர் இந்தச் சந்திப்பின் போது விசனம் வெளியிட்டார்.
இலங்கை அரசும் அதன் படைகளும் வன்னியில் இறுதிக்கட்டப் போரில் சர்வதேச விதிமுறைகளை மீறி மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளன என்று அவர் இதன்போது தெரிவித்தார்.
எனவே, இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தும் தீர்மானத்தை எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்ற அமெரிக்கா முழுமூச்சுடன் தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என்றும் அவர் எம்மிடம் கூறினார்.
அந்தத் தீர்மானத்தில் இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற மனித உரிமை
மீறல்கள், போர்க்குற்றங்கள் மட்டுமல்லாது தமிழர் தாயகத்தில் தற்போது இடம்பெற்று வரும் இராணுவ ஆக்கிரமிப்புக்கள், வன்முறைகள் உள்ளிட்ட இலங்கை அரசும், அதன் படைகளும் தமிழ் மக்கள் மீது இழைத்து வரும் மீறல்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று நாம் அவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் மாகாண சபை அமைக்கப்பட்ட பின்னரும், அங்கு அரசின் அனுமதியுடன் இராணுவத்தினர் தமிழ் மக்களின் சொந்த நிலங்களை அபகரித்து வருகின்றனர் என்றும் அவரிடம் சுட்டிக்காட்டினோம்.
இலங்கையில் போர் நிறைவடைந்து நான்கு ஆண்டுகள் கழிந்த நிலையிலும் அங்கு குற்றச் செயல்களும் மக்கள் மீதான கெடுபிடிகளும் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன என்று அல்ஜசீரா தொலைக்காட்சி அண்மையில் குற்றம்சாட்டியுள்ளதையும் அவரின் கவனத்துக்குக் கொண்டு வந்தோம்.
கடத்தல்கள், காணாமல்போதல்கள், சித்திரவதைகள், முன்னாள் பெண் போராளிகளுக்கு எதிரான இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் பாலியல் வன்முறைகள் தொடர்கின்றன என்றும், இரகசிய தடுப்பு முகாம்களிலும், சிறைச்சாலைகளிலும் முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களின் ஆதரவளார்கள் என்ற பெயர்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் மீதான சித்திரவதைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன என்று அல்ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்ட தகவல்களையும் அவரிடம் கூறினோம்.
இதேவேளை, மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழி விவகாரத்தையும் அவரின் கவனத்துக்குக் கொண்டு வந்தோம்.
அந்த மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்டு வரும் எலும்புக்கூடுகளைச் சீனாவுக்குப் பகுப்பாய்வு என்ற பெயரில் அனுப்பி அதன் உண்மைகளை மறைக்க இலங்கை அரசு முயற்சித்து வருகின்றது என்றும், எனவே இதை அமெரிக்கா உடன் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இது தொடர்பில் சர்வதேச விசாரணையை நடத்த அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் நாம் அவரிடம் வலியுறுத்தினோம் என்றார்.
இன்று புதன்கிழமை வட பகுதிக்குச் செல்லும் சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்ரீபன் ராப், மாலை 4 மணியளவில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடுவர் என்றும் சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...