Friday, January 17, 2014

அமெரிக்கத் தூதரகத்தின் டுவிட்டர் செய்தி தொடர்பாக ஜி.எல்.பீரிஸ், வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடவுள்ளார்!

sss1713
Friday,17th of January 2014
அமெரிக்கத் தூதரகத்தின் டுவிட்டர் செய்தி தொடர்பாக சிறிலங்கா வெளிவிவக அமைச்சர் ஜி . எல் . பீரிஸ் , வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன .
 
அண்மையில் அமெரிக்கத் தூதரகத்தின் டுவிட்டர் பக்கத்தில் , 2009 ஜனவரியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் சிறிலங்கா படையினரின் பீரங்கித் தாக்குதலில் கொல்லப்பட்ட இடம் என்று சென் . அந்தனிஸ் மைதானம் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது .இது சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருந்த நிலையில் , அதுகுறித்து தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது .எனினும் அது அமெரிக்காவின் அதிகாரபூர்வ நிலைப்பாடே என்று அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் கூறியிருந்தார் .
 
இந்தநிலையிலேயே , இது நியாயமற்றது என்றும் , சோடிக்கப்பட்ட , நிரூபிக்க முடியாத குற்றச்சாட்டு என்றும் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அரசாங்கம் இதுகுறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்க முடிவு செய்துள்ளது .சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி . எல் . பிரீஸ் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து அமெரிக்காவின் இந்த நியாயமற்ற கருத்து தொடர்பாக முறையிடத் திட்டமிட்டுள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன .

இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளராக சேனுக்கா செனவீரத்ன நியமிப்பு!

Friday,17th of January 2014
இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளராக சேனுக்கா செனவீரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் வெளிவிவகார அமைச்சின் செயலாளராக கருணாரத்ன அமுனுகம செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலாளராக கடமையாற்றிவந்த சேனுக்கா செனவிரத்ன புதிய வெளிவிவகாரச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரைகாலமும் வெளிவிவகார அமைச்சின் செயலாளராக கடமையாற்றிவந்த கருணாதிலக அமுனுகம ஓய்வுபெறுவதைத் தொடர்ந்து, அப்பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கருணாதிலக அமுனுகம மற்றுமொரு அமைச்சில்பதவியொன்றை பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Friday,17th of January 2014
தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பிரஜைகள் என்ற ரீதியில் தமிழ் மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டியில் நடைபெற்ற தைப் பொங்கல் விழாவில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சில தரப்பினர் இனவாதத்தை தூண்டி நாட்டில் பிரிவினைவாதத்தை ஊக்குவிதது நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்த நிறைவின் பின்னர் நாட்டில் பிரிவினைவாதத்தை தூண்டாது, சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியினர் சரியான பாதையை காட்டுவதனை விடவும், சேறு பூசுவதில் நாட்டம் கொண்டுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் எந்தவொரு இடத்தில் வாழ்ந்தாலும் அனைவரும் ஒரே தாயின் பிள்ளைகள் எனத் தெரிவித்துள்ளார்.

அச்சமோ சந்தேகமோ இன்றி அனைவரும் வாழக் கூடிய பின்னணி உருவாக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி என்ற ரீதியில் தமக்கு உள்ள கடமைகளிலிருந்து ஒரு போதும் விலகப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனந்தி சசிதரன் புனிதரல்ல – பாதுகாப்பு அமைச்சு!

Friday,17th of January 2014
வட மாகாண சபையின் உறுப்பினர் ஆனந்த சசிதரன் ஓர் புனிதரல்ல என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடவில்லை என ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். எனினும், ஆனந்த சசிதரனுக்கும் புலிகளுக்கும் இடையிலான கடந்தகால உறவு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

யுத்த காலத்திலும் அதன் பின்னரும் ஆனந்தி சசிதரனின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். ஆனந்தி சசிதரனுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டுமென்ற பாதுகாப்பு அமைச்சின் நிலைப்பாட்டுக்கு எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக ஆனந்தியின் கணவர் எழிலன் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு கிழக்கு மாகாணங்களின் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை ஊடறுக்கும் நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் துறையை உருவாக்கியிருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஆனந்தி சசிதரனுக்கும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதன் அடிப்படையிலேயே தாக்கப்பட்டதாகவும், அரசியல் போர்வையில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட அனுமதியளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு ஆதரவளிக்கப்படும் - அமெரிக்கா!

Friday,17th of January 2014
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு ஆதரவளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. சட்டம் மற்றும் நீதித்துறையை மேம்படுத்தும் நோக்கில் இவ்வாறு உதவிகள் வழங்கப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே. சிசன் தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுக்கிற்கான சிவில் சமூகத்தின் ஆதரவு என்ற சட்டத்தரணிகள் சங்கத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். மூன்றாண்டு விசேட திட்டமொன்றின் மூலம் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சட்டத்துறை உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள வழியமைக்கும் என அறிவித்துள்ளார்.

நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமையை வலுப்படுத்துவதற்கு பூரண ஆதரவளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நூலகம் மற்றும் கேட்போர் கூடத்தை புனரமைக்கவும் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

Thursday, January 16, 2014

கடற்கொள்ளையரை எதிர்கொள்ள கடற்புலிகளை தோற்கடித்த அனுபவங்கள் கைகொடுக்கும்: அமைச்சர் நியோமல் பெரேரா கூறுகிறார்!

News ServiceThursday,16th of January 2014
இந்து சமுத்திரத்தில் கடல் கொள்ளைக்காரர்களை எதிர்கொள்ளவும் வளைகுடா நாடுகளின் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குவதிலும் கடற்புலிகளை தோற்கடித்து அழித்தொழித்த இலங்கையின் அனுபவங்கள் பெரும் பயன்தரக்கூடியவை என வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா
 
 ஓமான் ட்றிபியூன் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.“சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தமொன்றை செய்யவுள்ள இலங்கை, அரபு நாடுகளுக்கான தென் கிழக்காசிய நுழைவாயிலாக வரவுள்ளது. தென் கிழக்காசிய நாடுகளுக்கான கடல் பாதையில் உள்ள கொழும்பு துறைமுகம், பெரிய தாய்க் கப்பல்களையும் உள்வாங்கும் தகுதியுள்ளது.
 
எனவே இலங்கை, வளைகுடா நாடுகளுக்கான மீள் ஏற்றுமதி மையமாக மாற முடியும். ஓமான் உட்பட வளைகுடா நாடுகள் கொழும்புக்கு அனுப்பிவைக்கும் பொருட்களை எம்மால் சிறு கப்பல்கள் மூலம் இந்த பிராந்தியத்திலுள்ள வேறு நாடுகளுக்கு அனுப்பிவைக்க முடியும்" என பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா மேலும் தெரிவித்தார்
 
 

எதிர்வரும் 30ம் திகதி முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும்!

எதிர்வரும் 30ம் திகதி முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும்Thursday,16th of January 2014
எதிர்வரும் 30ம் திகதி முதல் மேல் மற்றும் தென் மாகாணசபைகளுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
 
எதிர்வரும் 30ம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 6ம் திகதி வரையில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு மாகாணசபைகளும் இந்த வாரத்தில் கலைக்கப்டப்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் எதிர்வரும் மார்ச் மாதம் இறுதி வாரங்களில் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, January 15, 2014

யாழ்.போதனா வைத்தியசாலையின் மற்றொரு தொழிற்சங்க பணியாளர்கள் இன்று காலை முதல் அடையாளப்போராட்டம்!

Thursday,16th of January 2014
யாழ்.போதனா வைத்தியசாலையின் மற்றொரு தொழிற்சங்க பணியாளர்கள் இன்று காலை முதல் அடையாளப்போராட்டமொன்றில் குதித்துள்ளனர்.இலங்கை ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் சுகாதார சேவையில் பணியாற்றும் சுகாதார சிற்றூழியர்களே இன்று காலை சுமார் ஜந்து மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

யாழ் போதனா வைத்தியசலை  சுகாதார சிற்றூழியர்களான இவர்கள் இன்று காலை 7மணி தொடக்கம் 12 மணி வரையான ஜந்து மணிநேர அடையாளப்போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.தமது ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே இந்த புறக்கணிப்பில் ஈடுபட்டனர்;. தமக்கான கொடுப்பனவுகள் லீவுகள் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளினில் பரிசாரகர்களுக்காக ஒரு வருட காலப்பயிற்சி ,முறையற்ற பதில் கடமை நியமனங்கள் வழங்குவதை தவிர்த்தல் என்பற்றினை முன்வைத்தே இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த பணிப்புறக்கணிப்பு தொடர்பில் குறித்த அமைப்பின் யாழ்.பிராந்திய செயலாளர். ஜெயரூபன் கருத்து தெரிவிக்கையில், தாம் ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே 5மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதாகவும் இந்த பணிப்புறக்கணிப்பு இன்று 12மணியுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.ஆயினும் இந்த கோரிக்கைகள் யாவும் நிறைவேற்றப்படாத பட்சத்தில் மீண்டும் தமது போராட்டத்தில் ஈடுபட வேண்டிய தயாராகவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே யாழ்.போதனா வைத்தியசாலையினில் தொடரும் இத்தகைய போராட்டங்களினால் அன்றாட செயற்பாடுகள் மந்த கதியினை அடைந்துள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள பொருளாதாரத் தகவல்கள் குறித்து சர்வதேச நாணய நிதியம் கேள்வி!

Thursday,16th of January 2014அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள பொருளாதாரத் தகவல்கள் குறித்து சர்வதேச நாணய நிதியம் கேள்வி எழுப்பியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பொருளாதாரப் புள்ளி விபரத் தகவல்களின்; நேர்மைத்தன்மை குறித்து சர்வதேச நாணய நிதியம் கேள்வி எழுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புள்ளி விபரவியல் திணைக்களமும், மத்திய வங்கியும் வழங்கிய நம்பகமற்ற தகவல்களினால் சர்வதேச நாணய நிதியத்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் இந்த புள்ளி விபரத் தகவல்களை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடாமை வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கற்பனை பொருளாதார வளர்;ச்சியிலேயே இலங்கை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றமடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போலியான தகவல்களினால் கொள்கை வகுப்பதில் சிக்கல் நிலைமைகள் ஏற்படக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார். இது நாட்டின் எதிர்காலத்தை மோசமாகப் பாதிக்கக் கூடுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் வறிய மக்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்களில் உண்மையில்லை எனவும், வறியவர்கள் பற்றிய புள்ளி விபரத் தகவல்கள் திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொழிலுக்காக வெளிநாடு சென்ற 3000 இலங்கையர்கள் முறைப்பாடு!

Wednesday,15th of January 2014
மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக  சென்று மீண்டும் நாடு திரும்பும் நோக்கில் மூவாயிரத்திற்கும் அதிகமானவர்களிடமிருந்து  முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிக்கின்றது.
 
ஒப்பந்த காலப்பகுதிக்குள் எவருக்கும் நாடு திரும்ப முடியாது என பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளரும் ஊடகப் பேச்சாளருமான மங்கல ரன்தெணிய கூறுகின்றார்.
 
மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வபர்களுக்கான ஒப்பந்த காலம் 2 வருடங்களாக இருப்பதுடன் இந்த காலப்பகுதியில் ஒப்பந்தத்தை மீறி மீண்டும் நாடு திரும்ப முடியாது என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிடுகின்றது.
 
இது தொடர்பில் மக்கள் தெளிவடைய வேண்டும் என பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளர் கூறுகின்றார்.
 
கடந்த வருடம் சுமார் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பெண்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதுடன் இவர்களுள் மூவாயிரத்திற்கும் அதிகமானவர்கள் மீண்டும் நாடு திரும்பும் நோக்கில் கோரிக்கைகளை  முன்வைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
 
இது தொடர்பில் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன்னர் தெளிவூட்டப்பட்ட போதிலும் அங்கு சென்ற பின்னர் சிலர் மீண்டும் நாட்டிற்கு வர முயற்சிப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிக்கின்றது.

Sunday, January 12, 2014

மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் இந்திய மீன்பிடி அமைச்சருடன் பேச்சு ராஜித சேனாரத்ன!

n133Sunday,12th of January 2014
எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழமை புதுடில்லியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கடற்றொழில் , நீரியல்வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன நேற்று வீரகேசரிக்குத் தெரிவித்தார் .
 
இந்தியத் தலைநகரமான புதுடில்லியில் 15 ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொள்வர் . இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழக மீனவர் சங்கங்களின்ஆலோசகர் என் . தேவதாஸ் கலந்து கொள்வார் .
 
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த குற்றத்திற்காக 234 இந்திய மீனவர்கள் இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் . இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்ததற்காக 102 இலங்கை மீனவர்கள் இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது .
 
அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் அமைச்சின் அதிகாரிகளும் யாழ்ப்பாணம் , மன்னார் , முல்லைத்தீவு மீனவர் சங்கங்க ளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் விசேட கூட்டமொன்று 15 ஆம் திகதி இரவு 7.00 மணியளவில் புதுடில்லியில் நடைபெறுமெனவும் அமைச்சர் தெரிவித்தார் . இந்தக் கூட்டத்தில் தமிழக மீனவர் சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொள்வர் .
 
புதுடில்லியில் நடைபெறும் கூட்டங்களில் தமிழக முதலமைச்சரோ அல்லது மீன்பிடி அமைச்சரோ கலந்து கொள்ள மாட்டார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார் .
 

அன்ரனோவ் 24ரக விமானத்தில் பயணித்த 17 பேரின் ஆடைகள் இனங்காணப்பட்டுள்ளன!

lion airSunday,12th of January 2014
உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் நோக்கில் அவ் விமானத்திலிருந்து மீட்கப்பட்ட பொருட்கள் இன்று இரண்டாம் நாளாக யாழ் சுப்பிரமணியம் சிறுவர் பூங்காவிற்கு முன்பாக மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன .
 
 நேற்று காலை 10 மணி தொடக்கம் மக்கள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு இன்று பி . ப 4 மணியுடன் நிறைவடைகிறது . இதுவரை விமானத்தில் பயணித்த 17 பேரது ஆடைகளை அவர்களது உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்
 

23 பேரின் போலி அடையாள அட்டை விண்ணப்பங்கள் போலியானவை!

Sunday,12th of January 2014
கடந்த வருடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களுள், 6500 விண்ணப்பங்கள் இவ்வாறு சந்தேகத்துக்கு இடமானவை என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
 
போலியான ஆவனங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டிருந்த 23 பேரின் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை ஆட்பதிவு திணைக்களம் குற்றப் புலனாய்வு தரப்பிடம் வழங்கியுள்ளது.
 
அவர்களில் பெரும்பாலானவர்கள் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அவற்றில் 23 விண்ணப்பங்கள் போலியானவை என்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அது குறித்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வு தரப்பிடம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Saturday, January 11, 2014

த.தே.கூட்டமைப்புக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்க ஆனந்த சங்கரி, டக்ளஸ் திட்டம் ?.

Sunday,12th of January 2014
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக பலமான கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் அரசு சார்பு தமிழ்க் கட்சிகள் சிலவற்றுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
 
இந்த கலந்துரையாடலில், ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர் என்றும் அந்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த கலந்துரையாடல், யாழ். நல்லூரில் அமைந்துள்ள மாநாட்டு மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 4 மணியிலிருந்து இடம்பெற்றுள்ளது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் ஸ்ரீடெலோ அமைப்பினரும் கலந்துகொண்டுள்ளனரெனவும் அறியவந்துள்ளது.
 
இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கம் எதிர்காலத்தில் மேற்கூறப்பட்ட அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஒரு கூட்டணியாகச் செயற்படுவது என்பதுடன், இந்தக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது தொடர்பான விடயங்களை சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

வலி. கிழக்கு பிரதேசசபை வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னணி!


Saturday,11th of January 2014
 தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரும், மாகாண சபை உறுப்பினருமாகிய அரியகுட்டி பரம்சோதியின் நேரடி வழிகாட்டலில், தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த 7 பேர் EPDP-ன் 5 உறுப்பினர்களுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலான வலி. கிழக்குப் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்தை முதல் முறையாக 3 மேலதிக வாக்குகளால் தோற்கடித்துள்ளனர்.
 
இதன்மூலம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலான வலி. கிழக்குப் பிரதேச சபை விசேட ஆணையாளரின் ஆட்சியின் கீழ் கொண்டுவரும் ஆரம்பகட்ட நிலையினைத் தோற்றுவித்துள்ளனர்.
 
திரு. மாவை சேனாதிராசா அவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலான பிரதேச சபைகளில் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், மாறாக தோற்கடிக்கும் வகையில் எதிர்த்து வாக்களிப்பவர்கள் மீது கட்சி கடும் நடவடிக்கை எடுக்குமென்ற பகிரங்க அறிக்கையைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தனிப்பட்ட கடிதமும் அனுப்பியிருந்தார்.
இதற்கமைய 27.12.2013 அன்று நடைபெற்ற வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றுவதற்கான சிறப்புக் கூட்டத்தில் எதிர்த்து வாக்களிக்க எண்ணியிருந்த 7 பேரும் தவிர்த்துக் கொண்டனர். இதனால் ஈ.பி.டி.பி.யினரும் இக்கூட்டத்தினை தவிர்த்துக் கொண்டனர்.
 
இதன் பின்னர், மாகாண சபை உறுப்பினரான திரு.பரஞ்சோதியின் தூண்டுதலினால் அக்கூட்டத்திற்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற பொய்யான ஒரு நாடகத்தை மேற்கொண்டு, ஈ.பி.டி.பி.யினருடன் இணைந்து கையெழுத்திட்டு உள்ளூராட்சி அமைச்சரான முதலமைச்சருக்கு முறையீட்டை மேற்கொண்டனர்.
இதனால், இதுபற்றி விசாரிக்க முதல்வர் நியமித்த விசாரணைக்குழு அக்கூட்டம் திருப்திகரமாக நிறைவேற்றப்படவில்லை என்ற முடிவினை முதல்வருக்கு அறிவித்ததுடன், இன்று 10.01.2014 இல் தவிசாளர் தலைமையில் வரவு-செலவுத் திட்டம் மீண்டும் நிறைவேற்றப்பட வேண்டும் என பரிந்துரைத்திருந்தது.
 
இதனடிப்படையில், முதல்வர் உள்ளூராட்சி ஆணையாளருக்கு விடுத்த பணிப்பின் பேரில், உள்ளூராட்சி உதவி ஆணையாளரின் மேற்பார்வையில்
கூட்டம் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது.
 
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட உரும்பிராயைச் சேர்ந்த தமிழரசுக் கட்சி
உறுப்பினர், ஓய்வுபெற்ற ஆசிரியர் திருநாவுக்கரசு அவர்களை ஈ.பி.டி.பி உறுப்பினர் இராசநாயகம் தமது மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்ததும், கூட்டம் முடிந்ததும் உப தவிசாளரான நீர்வேலியைச் சார்ந்த சமாதான நீதவான் தர்மலிங்கம் அவர்களை ஈ.பி.டி.பி உறுப்பினர் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.
 
கூட்டத்தின் வாக்களிப்பின்போது, தவிசாளர் எனது 25 வருட நண்பனாக இருந்தபோதும் கட்சிக்கு கட்டுப்பட்டு எதிர்த்து வாக்களிக்கின்றேன் என்று உப தவிசாளரான தர்மலிங்கம் கூறியிருந்தார். இதுபற்றி அவரேதான் விளக்கம் கொடுக்க வேண்டும்.
 
இன்றைய கூட்டத்திற்கு முன்னர் தழிரசுக் கட்சியின் செயலாளர் திரு. மாவை சேனாதிராசா அவர்கள், வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் சபை முடக்கப்படும், உறுப்பினர்கள் அனைவரும் வீட்டுக்செல்ல நேரும், வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டு மக்களுக்கான சேவை தொடரப்பட வேண்டும் என்பதற்காகவே இக்கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்றவேண்டும் என்பதை எதிராக நிற்கும் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்துமாறு பரஞ்சோதியிடம் பணித்திருந்தார்.
எனினும், மாவை சேனாதிராசா அவர்களின் வேண்டுகோளை அவர்கள் அலட்சியப்படுத்தி வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கபட்டமையால், பிரதேச சபை செயற்பாடுகள் விசேட ஆணையாளரின் கீழ் கொண்டுவரப்படும் நிலை தோற்றுவிக்கப்பட்ட துரதிஷ்டவசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று சபையின் தவிசாளர் திரு. அ.உதயகுமார் தெரிவித்தார்.


சர்­வ­தேச நாடு­களால் விமர்­சனம் செய்­யப்­ப­டு­கின்­ற இலங்கையின் சட்டத்தை சிறந்­த­தாக்க முயற்­சி. ரவூப் ஹக்கீம்!

ss1128Saturday,11th of January 2014
அங்கீகாரத்தோடு விரைவில் நடைமுறைக்கு வரும் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார் .
 
நீதிபதிகளுக்கு என ஒழுக்கக் கோவை ஒன்று தேவையாகவுள்ளது . அதனை விரைவில் வர்த்தமானியில் பிரசுரிப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார் . மல்லாகம் நீதிமன்றத்தினை நேற்று முன்தினம் திறந்து வைத்த பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் .
 
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
 
இலங்கையில் சட்டத்தின் ஆட்சி தொடர்பில் சர்வதேச நாடுகளால் விமர்சனம் செய்யப்படுகின்றது . அதனால் சட்டத்தின் ஆட்சியை மேலும் சிறந்ததாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம் .
 
போரின் பின்னர் நாட்டில் படிப்படியாக சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தி வருகின்றோம் . மாகாண சபைத் தேர்தலைக் கூட ஜனநாயக ரீதியில் நடத்தியிருந்தோம் . இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்புத் தொடர்பில் புதிய சட்ட நியமங்களை அறிமுகப்படுத்த முடியும் . இதன் மூலம் நாட்டின் சட்டத்தின் ஆட்சியை சிறந்ததாக மாற்ற முடியும் . அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம் .
 
நீதிமன்ற அவமதிப்புத் தொடர்பாக பரந்த கலந்துரையாடலை நீதி அமைச்சு மேற்கொண்டு சட்ட ஆலோசனைக்குழு மூலமாக அதனைச் சட்டமாக்கியுள்ளது . விரைவில் அந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் .
 
நீதித்துறையில் இருப்பவர்கள் மக்களுக்குப் பொறுப்புக் கூறவேண்டும் . இதுபற்றி பிரதம நீதியரசர் சில திட்டங்களை வகுத்து வருகிறார் . வெறும் சட்டங்களால் மாத்திரம் நாட்டில் நீதி , நிர்வாகத்தை சீர்செய்துவிட முடியாது . பொதுமக்கள் தமது பிணக்குத் தொடர்பில் இறுதியாகவே நீதிமன்றை நாடுகிறார்கள் . இவ்வாறு வரும் அவர்கள் அச்சத்துடனேயே வருகிறார்கள் . ஆனால் அவர்கள் நீதிமன்றுக்கு அச்சத்துடன் வரவேண்டிய அவசியமில்லை .

மேல் மற்றும் தென் மாகாண சபைகள் நாளை கலைக்கப்படும்?.

Saturday,11th of January 2014
மேல் மற்றும் தென் மாகாண சபைகள் பெரும்பாலும் நாளைய (12) தினம் கலைக்கப்படக்கூடும் என தெரியவருகிறது.
 
மாகாண சபையை கலைக்குமாறு தென் மற்றும் மேல் மாகாண முதலமமைச்சர்கள் யோசனை முன்வைத்த பின்னர் ஆளுநர்கள் அதனை செயற்படுத்துவர்.
 
இதேவேளை, மாகாண சபைகள் கலைக்கப்பட்ட பின் தேர்தல் மார்ச் 29ம் திகதி நடத்தப்படும் என அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Friday, January 10, 2014

போருக்குப் பின்னர் தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை- வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன்!

Saturday,11th of January 2014
இராணுவ ஆட்சி முறைமை தமிழர்களுக்கு தேவையில்லை என்றும், போருக்குப் பின்னரான காலத்தில் தமிழர்களுக்கான பாதுகாப்பு இல்லாத நிலையே இருப்பதாகவும் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
வடக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்தல்” என்னும் தொனிப்பொருளில் யாழிலுள்ள விடுதியொன்றில் இன்று நடைபெற்ற மாகாண சபை உறுப்பினர்கள், சிவில் சமுகப் பிரதிநிதிகளுக்கிடையிலான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
வடக்கில் வாழ்கின்ற மக்கள் பாதுகாப்பையும், சுதந்திரத்தையுமே எதிர்பார்க்கின்றார்களே தவிர, பெருந்தெருக்கள் அமைப்பதையோ, விடுதிகள் அமைப்பதையோ விரும்பவில்லை. போருக்குப் பிந்திய காலத்தில் மக்களின் பாதுகாப்பும், சுதந்திரமும் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
 
வட மாகாணசபை உருவாக்கப்பட்டு 3 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்கிறார்கள் என மக்கள் மத்தியில் கேள்விகள் பல எழுந்துள்ளது. முதற்கட்டமாக கிராம மட்டத்தில் தொழில்சார் முன்னேற்றத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.
 
வடக்கிலிருந்து பல கல்விமான்கள், புத்திஜீவிகள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். மீளவும் அவர்கள் இங்கே வருவதற்கு பாதுகாப்பு இல்லை என்ற ஒரு காரணத்தினாலேயே அவர்கள் இங்கே வருவதை தவிர்க்கின்றார்கள். அவர்கள் இங்கு மீளவும் வந்து பிரதேசத்தை அபிவிருத்தியடையச் செய்வதற்கு அவர்களது பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துவதற்கு, அரசாங்கத்துடன், பேசவுள்ளோம் என்றார்.
 
எங்கள் மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் போரின் பின்னரும் மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமலும், தமது விவசாய நிலங்களில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை இன்றும் காணப்பட்டு வருகின்றது. அகதி முகாம்களில் வாழ்வாதார நெருக்கு வாரங்களுக்கு மத்தியில் எமது மக்கள் வாழந்து கொண்டிருக்கின்றார்கள்.
 
இந்நிலையில், எமது மக்களின் காணிகளை இராணுவம் ஆக்கிரமித்துள்ளதோடு, எமது நிலங்களில் இராணுவம் விவசாய நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். எல்லா சமூகங்களும் இணைந்து ஒற்றுமையினை நாங்கள் விரும்புகின்றோம்.
 
தமிழ் மக்களின் மொழி, கலை, கலாச்சாரம் தெரியாத இராணுவ ஆட்சி முறைமை வடக்கு தமிழர்களுக்கு தேவையில்லை. இதனால் தான் இராணுவப் பின்னணி கொண்ட ஒருவர் ஆளுனராக இருப்பதை நாங்கள் எதிர்ப்பதோடு, சிவில் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளுனராக வரவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
 
நேற்று காலை நடைபெற்ற இந்த செயலமர்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதிக்கும் -இஸ்ரேல் ஜனாதிபதிக்குமிடையே சந்திப்பு!

Saturday,11th of January 2014
இஸ்ரேல் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று காலை ஜெரூசலம் நகரிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இஸ்ரேலிய ஜனாதிபதி ஷிமோன் பெரெஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இப் பேச்சுவார்த்தையின் போது ஜனாதிபதியின் தலைமைத்துவத்தை பெரிதும் பாராட்டிய இஸ்ரேலிய ஜனாதிபதி ‘ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இலங்கை பெற்றுக்கொண்டுள்ள நன்மைகள் குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்' என்றும் 30 ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து அபிவிருத்தியையும் நாட்டு மக்களிடையே ஐக்கியத்தையும் மேலோங்கச் செய்துள்ள ஜனாதிபதியின் செயற்பாடுகளை இஸ்ரேலிய ஜனாதிபதி பெரிதும் பாராட்டினார்.
 
செழுமையான வரலாற்றையும் புத்தி சாதுரயமுள்ள மக்களையும் இலங்கை கொண்டிருப்பதாக இஸ்ரேலிய ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இதனிடையே 2004 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது இஸ்ரேலிய அரசினால் வழங்கப்பட்ட உதவிகளுக்கு
ஜனாதிபதி தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.   

மேலும் இஸ்ரேல் -பலஸ்தீன் மோதலுக்கு தீர்வாக இரு நாடுகளிலும் வேறு ஆட்சிகளை அமைப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிபார்சுக்கு தாம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்
 
இதனையடுத்து, இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் இஸ்ரேல் வர்த்தக பிரமுகர்களை ஜனாதிபதி சந்தித்ததுடன் இரு நாடுகளுக்கிடையில் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அதனையடுத்து ஜரூசலம் வனவியல் பூங்காவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ஞாபகர்த்தமாக ஒலிவ் மரக்கன்று ஒன்றையும் நாட்டி வைத்தார்.
 
இந் நிகழ்வின்போது வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமைச்சின் மேற்பார்வை எம்பி சஜித் வாஸ் குணவர்த்தன, பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இஸ்ரேல் நாட்டுக்கான இலங்கை தூதுவர் சரத் டி விஜேசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அடிப்படையற்ற இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் ஆச்சரியமளிக்கின்றது-

Saturday,11th of January 2014
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது இலங்கை இராணுவத்தால் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்ட இடங்கள் என்ற பெயரில் சென். அந்தோனி மைதான புகைப்படங்களை அமெரிக்க தூதரகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களாக நேற்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
 
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தின் பீரங்கி தாக்குதலில் நூற்றுக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் கொல்லப்பட்ட இடம் என்று அந்த புகைப்படத்துக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களாக இவை முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் வாழும் மக்களின் கூற்றுப்படி தமிழீழ விடுதலை புலிகள் போராட்டத்தின் போது காயங்கள் காரணமாக இறந்த தங்கள் பிரிவினரை ஒப்படைக்க இந்த நிலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடம் பாதுகாப்பாக இல்லை என்றால், விடுதலை புலிகள் அந்த நோக்கத்திற்காக அதை ஒருபோதும் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள்.
 
பொதுமக்கள் இவ் இடத்தில் இருக்கும் போது இந்த இடத்தில் ஷெல் தாக்குதல்கள் நடத்தப்படமாட்டாது என்பதை உருதி செய்த பின்னரே இதற்கு முன்வந்துள்ளனர் என்பது உறுதி.
மேலும் இலங்கை இராணுவம் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கொத்து (கிளஸ்டர்) மற்றும் இரசாயன குண்டுகளை பயன்படுத்தியதாக யாழ், மன்னார் மறைமாவட்ட ஆயர்கள் கூறியுள்ள கூற்றில் எந்தவித உண்மையும் கிடையாது என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
 
யாழ்ப்பாண ஆயர் தோமஸ் செளந்தர நாயகம், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆகியோரின் கூற்றை இலங்கை இராணுவத்தின் சார்பில் தான் முற்றாக மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை இலங்கை விமானப்படை ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி உறுதி செய்த பயங்கரவாதிகளின் இலக்கை தவிர வேறு எந்த இடத்திற்கும் விமானத் தாக்குதலை நடத்தவில்லை என்றும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
 
இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் போர் குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே ரெப் தலைமையிலான குழுவினரை சந்தித்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப், முல்லைத்தீவு புதுமாத்தளன் பிரதேசங்களில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரால் விமானக்குண்டுகள், கொத்தணிக் குண்டுகள் (கிளஸ்டர்) மற்றும் இரசாயனக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்றும், இந்த மூன்று வகையான குண்டுத் தாக்குதல்கள் காரணமாக பெரும்பாலான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றும் தூதுக்குழுவினரிடம் இவர் குறிப்பிட்டுள்ளார். மன்னார் ஆயரின் இந்தக் கூற்றுத் தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரியவிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,
 
இலங்கை இராணுவம் யுத்த வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் யுத்த சம்பிரதாய முறைக்கு அப்பால் எந்தவிதமான ஆயுதங்களையும் பயன்படுத்த வில்லை. ஏனெனில் சகல சந்தர்ப்பங்களிலும் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆயுதங் களையே பயன்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொத்தணி மற்றும் இரசாயனக் குண்டுகளைப் பயன்படுத்துவதாகக் கூறுவதில் எந்தவித உண்மையும் கிடையாது.
 
அந்தக் கூற்றை நான் திட்டவட்டமாக மறுக்கின்றேன்.
வெளிநாடுகளிலிருந்து பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் சிலரும், வெளிநாட்டில் சொகுசாக வாழ நினைக்கும் சிலருமே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தனர். இந்நிலையில் சகலராலும் மதிக்கத்தக்க கெளரவம் மிக்க ஒரு மதத் தலைவரான மன்னார் மறைமாவட்ட ஆயரின் மேற்படி கூற்று மிகவும் மன வருத்தத்துக்குரிய தொன்றாகும். ஏனெனில், இவ்வாறான கூற்றானது புலம்பெயர்ந்திருந்து எமது நாட்டைப் பிளவுபடுத்த நினைக்கும் சிலரது செயற்பாடுகளுக்கு உந்துசக்தியாக அமைகின்றது.
 
அதேசமயம் மார்ச் மாதத்தில் நடை பெறவுள்ள ஜெனீவா மனித உரிமைப் பேரவையை இலக்காக வைத்தே சிலர் இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்களையும், கருத்துக்களையும் கூறிவருகின்றனர் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
 
இலங்கை பாதுகாப்புப் படையினர் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சகல சந்தர்ப்பங்களிலும் இழப்புக்கள் இல்லாத முறையையே பேணி வந்தது. இந்நிலையில் விமானக் குண்டுத் தாக்குதல் தொடர்பிலும் கூறப்பட்டுள்ளது. விமானப்படையினர் ஆளில்லாத விமானத்தைப் பயன்படுத்தி பயங்கர வாதிகளின் நடமாட்டத்தை உறுதி செய்ததன் பின்னரே பயங்கரவாதிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தினர். மாறாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுமக்களை இலக்குவைத்தோ அல்லது பொதுமக்கள் நடமாட்டமுள்ள பிரதேசத்தை இலக்குவைத்தோ எந்தவித விமானத் தாக்குதல்களையும் நடத்தவில்லை என்பதை நான் திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.

Top Eng News Websites in links in

======================================================================== ===================================================================...