Sunday, January 5, 2014

யாழில் 3 நீதிமன்றக் கட்டிடங்களின் திறப்பு விழா வடக்கு முதலமைச்சருக்கு அழைப்பில்லை- அழைக்கக் கோரி யாழ். சட்டத்தரணிகள் தீர்மானம்!

Sunday,5th of January 2014
யாழ். மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 3 புதிய மாவட்ட நீதிமன்றக் கட்டிடத் தொகுதிகளின் திறப்பு விழா எதிர்வரும் 9ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இத்திறப்புவிழாவுக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அழைக்கப்பட வேண்டும் என யாழ். சட்டத்தரணிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இந்தத் தீர்மானத்தை சட்டத்தரணி வி.டி.விஷ்வலிங்கம் கொண்டுவந்தார். பின்னர் இத்தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் யாழ். மாவட்ட நீதிபதி த.விக்னராஜா இந்த தீர்மானத்தை வழிமொழிந்தார்.

நீதிமன்றக் கட்டிடத் தொகுதிகளின் திறப்புவிழாவுக்கு வடக்கு முதலமைச்சர் அழைக்கப்பட வேண்டும் எனக் கோரும் சட்டத்தரணிகளின் இத்தீர்மானம் நீதிச் சேவைகள் ஆணைக்குழு மற்றும் நீதியமைச்சுக்கு
அனுப்பிவைக்கப்பட்டன.
 
சாவகச்சேரி, மல்லாகம் மற்றும் ஊர்காவற்றுறை மாவட்ட நீதிமன்றங்களுக்கான புதிய கட்டிடம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், இந்நீதிமன்றக் கட்டிடத் தொகுதிகள் எதிர்வரும் 9ம் தேதி வியாழக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளன.
 
நீதிமன்றக் கட்டிடத் தொகுதிகளின் திறப்பு விழாவில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், சட்டமா அதிபர், நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர். எனினும், வட மாகாணத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
 
இந்நிலையில், திறப்புவிழா நிகழ்வு ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி செல்வி. சாந்தா அபிமன்னசிங்கம் தலைமையில், யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் நேற்று யாழ். நீதிமன்ற கட்டிடத்தில் கூடி ஆராய்ந்தனர். இதன்போதே வடக்கு முதலமைச்சர் நீதிமன்ற கட்டிடத் தொகுதிகளின் திறப்பு விழாவுக்கு அழைக்கப்படாத விடயம் குறித்து சட்டத்தரணிகளால் பிரஸ்தாபிக்கப்பட்டது.
 
வட மாகாணத்தில் நடைபெறும் நிகழ்வொன்றில், அம்மாகாண முதலமைச்சர் புறக்கணிக்கப்படுவது குறித்து சட்டத்தரணிகள் பலர் கடும் விசனம் வெளியிட்டனர். முதலமைச்சர் அழைக்கப்படாவிட்டால் இந்த நிகழ்வை புறக்கணிப்பதா? இல்லையா என்பது குறித்தும் ஆராயப்பட்டு அதுகுறித்த வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
 
முதலமைச்சர் அழைக்கப்படாவிட்டால், இந்த நிகழ்வைப் புறக்கணிக்க வேண்டுமென சட்டத்தரணிகள் பலர் வாதிட்டனர். இந்த விடயத்தை அரசியலாக்குவது தேவையற்றது என வேறு சிலர் எதிர்வாதம் புரிந்தனர். அரசியல் நோக்கிலேயே வடக்கு முதலமைச்சர் புறக்கணிக்கப்படுவதாக சிலர் குறிப்பிட்டனர்.
 
அரசியலுக்கு அப்பால் வடக்கில் நடைபெறும் முக்கிய நிகழ்வொன்றில் மாகாண முதலமைச்சர் அழைக்கப்படுவதே பண்பு. அப்பண்பு மீறப்படக்கூடாது எனப் பலர் கருத்து வெளியிட்டனர். மேலும், வடக்கு மாகாண முதலமைச்சராக உள்ள சி.வி.விக்னேஸ்வரன் முன்னாள் நீதியரசராவார்.
 
9ம் தேதி திறக்கப்படவுள்ள மல்லாகம் மற்றும் சாவகச்சேரி நீதிமன்றங்களில் அவர் முன்னர் நீதிபதியாக கடமையும் ஆற்றியுள்ளார். எனவே, அவர் இந்த நிகழ்வுக்கு நிச்சயம் அழைக்கபட வேண்டுமென சட்டத்தரணிகள் பலர் அழுத்தமாக வலியுறுத்தினர்.
 
இவ்வாறான கருத்தாடல்களின் பின்னரே வடக்கு முதலமைச்சரை திறப்பு விழாவுக்கு அழைக்க்கோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, சட்டத்தரணிகளிடையே வாக்கெடுப்புக்கு விடப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
இத்தீர்மானத்தின் பின்னரும் முதலமைச்சர் அழைக்கப்படாவிட்டால், அடுத்தகட்டமாக நிகழ்வை புறக்கணிக்கும் முடிவையே எடுக்கவேண்டி ஏற்படும் என இந்தக் கலந்துரையாடல்களில் கலந்துகொண்ட பின்னர் கருத்து வெளியிட்ட யாழ். சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் கருத்து வெளியிட்டார்.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...